

யானையும் காளையும் இணைந்த விசித்திரமான சிற்பம். இரண்டுமே உருவத்திலும் உயரத்திலும் வேறுபட்டவை. ஆனால் வலிமையில் இரண்டுமே தனிப்பட்ட திறனைக் கொண்டவை...ஒரே தலையில் இரண்டையும் இணைத்த சிற்பியின் கற்பனைத் திறனை என்னவென்று சொல்வது? இப்படி ஒரு சிற்பத்தைப் படைக்க, அவருக்கு உந்துசக்தியாக இருந்தது எது என்று பிரமிக்க வைக்கிறது.
யானை தனது கால்களைத் தூக்கி, காளையை முன்னோக்கித் தள்ளப் பார்க்கிறது. யானைக்குக் கோபம் வந்தால் தன் வாலை மேலே தூக்கியபடி ஓடும் என்பதையும், காளை தன் பின்னங்கால்களை நன்றாக உதைத்துக்கொண்டு முன்னோக்கி நகரும் என்பதை சிற்பி கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். யானை - காளைகளின் கால்களில் சிம்மத்தை வடித்து, இது சோழர்களின் கலைப் பொக்கிஷம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிற்பி.
வாதாபியில் தொடங்கி...
இந்தச் சிற்பம் பொ. ஆ. (கி.பி.) 1178-ல் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட திருபுவனம் கம்பகரேஸ்வர் கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இது போன்ற சிற்பங்கள் வாதாபியின் குகைக் கோவில், ஹம்பியில் விட்டலன் கோவில், தாராசுரம், திருவிற்குடி, சிதம்பரம், வேலூர், கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, வில்லிபுத்தூர், அழகர் கோவில், பட்டடக்கல், காஞ்சி வரதர் கோவில், ரங்கம் கோவில் எனப் பல கோவில்களில் காணப்படுகின்றன.
இருந்தாலும் திருபுவனம் கோயிலில்தான் உருவத்திலும், உடலமைப்பிலும், நுட்பமான வேலைப்பாடுகளிலும் தனித்துவ அடையாளத்துடன் திகழ்கிறது. மேற்கண்ட அனைத்தும் ஓரடி உயரத்திலும் ஒன்றரை அடி அகலத்திலும்
செதுக்கப்பட்ட சிற்பம். இதற்கு முன்னோடியாக ஆறாம் நூற்றாண்டில் வாதாபிக் குகைக் கோவில் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து படிப்படியாக அடைந்த பரிணாம வளர்ச்சிதான் இந்த அற்புதமான சிற்பக் கவிதை.