

ஷாராஜ்
அபுசாரி என்பவர் தையல் பொருள் கடையை சந்தையில் நடத்திவந்தார். நாள் முழுக்கப் பரபரப்பாக வியாபாரம் நடந்துகொண்டிருக்கும். அபுசாரியும் மும்முரமாகத் தொழிலில் ஈடுபட்டிருப்பார். ஆனால், தொழுகை நேரத்தில் கடையின் மூலையில் ஒதுங்கி, பக்தி சிரத்தையாக பிரார்த்தனையில் மூழ்கிவிடுவார்.
அப்போது துறவி ஒருவர் அவரது கடைக்கு வந்தபோது இதைப் பார்த்துவிட்டு, "நான் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவன். எனது பிரார்த்தனையின் மூலம், உனக்கும், உனது வியாபாரத்துக்கும் பலன் தர என்னால் இயலும்" என்றார்.
அபு அவரிடம், "நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"பிரார்த்தனையில் தீவிரமாக ஈடுபடுவதற்காகவும், கடவுளின் அருளை முழுமையாகப் பெறுவதற்காகவும் நான் பாலைவனத்தில் வசித்துக்கொண்டிருக்கிறேன்."
"அப்படியானால் நீங்கள் கடவுளிடமிருந்து வெகு தூரம் அந்நியப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். கடவுளுக்கு நெருக்கமாக நீங்கள் இருக்க வேண்டுமென்றால், சந்தைக் கடையில்தான் இருக்க வேண்டும். ஞானிகள் சந்தைக் கடையிலேயே வசிப்பார்கள். அப்போது ஒரு கணமும் கடவுளின் அருளிலிருந்து அவர்கள் விலகிவிட மாட்டார்கள்!" என்றார் அபுசாரி.