

சங்கர் வெங்கட்ராமன்:
லால்குடி என்ற ஊருக்கு இரண்டு பெருமைகள் உண்டு. ஒன்று, தியாகராஜ சுவாமிகளால் 'லால்குடி பஞ்சரத்தினம்' இயற்றப்பட்டது. மற்றொன்று, ஜெயராமன் என்னும் வயலின் மேதையை இசை உலகத்துக்கு கொடையாகக் கொடுத்தது.
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்த `பல்லவி’ ராமய்யரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். திருத்தவத் துறை க்ஷேத்திரம் எனப்படும் லால்குடிக்கு சத்குரு தியாகராஜ சுவாமிகள் எழுந்தருளி `லால்குடி பஞ்சரத்தினம்’ எனும் பொக்கிஷத்தை இயற்ற வழிவகை செய்ததே இந்த ராமய்யர்தான்!
தன்னுடைய தந்தை வி.ஆர். கோபாலய்யரையே குருவாகப் பெற்ற பாக்கியசாலி ஜெயராமன். அவரின் தந்தை அறிவுறுத்தியபடி, எவ்வளவு பெரிய பெருமைகள், சாதனைகளை செய்தாலும் அந்த வெற்றியால் அவர் தலைக்கனம் கொண்டதே இல்லை. இந்த அரிய பண்புக்குக் காரணம், “வெற்றியை உன் தலைக்கும் தோல்வியை உன் இதயத்துக்கும் எடுத்துச் செல்லாதே” என்னும் ஜெயராமனின் தந்தை கோபாலய்யர் வழங்கியிருந்த அறிவுரைதான்.
தொடக்கத்தில் பக்கவாத்தியக்காரராக தன்னுடைய வயலின் இசைப் பயணத்தைத் தொடங்கிய லால்குடி ஜெயராமன், பின்னர் அவரின் சகோதரி மதி பிரம்மானந்தத்துடன் சேர்ந்து வாசித்து தன்னுடைய கலையை மெருகேற்றிக்கொண்டார். அதன் பின்னர் தனியாக வயலின் கச்சேரிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலஷ்மி என தமது மகனையும் மகளையுமே மணியான இசை வாரிசுகளாக்கி எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். `சிருங்காரம்’ எனும் திரைப்படத்துக்கு இசையமைத்து தேசிய விருதையும் அவர் பெற்றுள்ளார்.
ராக மாளிகை!
ஜெயராமன் வயலின் வாசிக்கும் பாணி அலாதியானது. ராகத்தின் ரசானுபவத்தை அப்படியே பிழிந்து தந்துவிடுவார். எந்தவொரு ராகமாக இருந்தாலும், அதன் ஜீவ ஸ்வரங்களின் அடிப்படைப் பிரயோகங்களை ரசிகர்களுக்கு கோடிட்டுக் காட்டி, அந்த அஸ்திவாரத்தின்மீது மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கட்டிவிடுவார்.
வானவில்லின் வண்ணஜாலங்களை அப்படியே பிடித்துவந்து வண்ண ஓவியங்களாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வர்ணங்களாய் இசையுலகுக்குக் காணிக்கையாக்கிவிடும் வல்லமை லால்குடியின் வயலின் இசைக்கு உண்டு.
ஸ்ருதி சுத்தம், நயத்துடன் கலந்த லயக்கோவை, ஜீவனான மென்மையான வாசிப்பு. சக கலைஞர்களுடன் அனுசரிப்புடன் கூடிய வாசிப்பு, ராஜ கம்பீரத்துடன் அபூர்வ மந்தகாசமும் கலந்துவரும் `வில்’ வீச்சு... இவையே லால்குடி வாசிப்பின் சிறப்பம்சங்கள்.
கிழக்குலக இசை மேதைகளைப் போல் மேற்குலக இசை மேதைகளையும் லால்குடி ஜெயராமனின் வாசிப்பு மெய்மறக்க வைத்திருக்கிறது. “செவிவழி புகுந்து சிந்தையில் உறையக்கூடியது லால்குடியின் வாசிப்பு. அவர் ஒரு ராகரஸசுரபி. அவரது சுனாதமான வயலின் வாசிப்பு, கேட்போர் நெஞ்சங்களைக் குளிர்வித்து சொர்க்க லோகத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது” என்று புகழ்ந்தார் மேற்குலகின் புகழ்பெற்ற வயலின் இசை மேதை யெஹுதி மெனுஹின்.
தில்லானா சக்ரவர்த்தி!
லால்குடியின் தில்லானாக்கள் மிகவும் பிரபலம். முன்னணி நடனமணிகள் பலரும் இவரது தில்லானாக்களுக்கு முத்திரை பதிக்கும் அபிநயங்களை விரும்பி வழங்கி நடனக் கச்சேரிகள் செய்துள்ளனர். நடனமணிகள் மட்டுமல்ல நாகஸ்வர இசைக் கலைஞர்கள் பலரும்கூட லால்குடியின் தில்லானாக்களை விரும்பி இசைத்துள்ளனர். “லால்குடி ஜெயராமனை தில்லானா சக்ரவர்த்தி என்று தாராளமாக அழைக்கலாம்” என்றார் நாகஸ்வர மேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்.
அத்வைத இசை
கச்சேரிகளில் தொடக்கத்தில் ஜெயராமன் – வயலின் – அதிலிருந்து வெளிப்படும் இசை – ரசிகர்கள் எனத் தனித்தனியாக இருக்கும். கச்சேரி களைகட்டத் தொடங்கியதும் ஜெயராமனும் வயலினும் இசையுடன் கலக்க, ரசிகர்களையும் தன்பால் ஈர்க்கத் தொடங்கிவிடுவார். பின்னர், ஜெயராமன் – ரசிகர்கள் என இரண்டு தத்துவங்கள் மட்டுமே நமக்குத் தெரியும். இன்னும் சில மணித் துளிகளில் அதுவும் மறைந்து ஒன்றறக் கலந்து `அத்வைதத்தில்’ ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்ற தத்துவத்தை பறைசாற்றுவதுபோல், இசை என்ற ஒரேயொரு குடையின்கீழ் அனைத்தும் சங்கமமாகி விடும்.
லால்குடியைப் போன்ற மெய்ஞானத் தத்துவ வித்தகர்கள் இசையுலகுக்கு இன்னும் நிறைய தேவை. இசைத் தெய்வத்துக்கு `வில்’லாலும் விரலாலும் ஸ்வரார்ச்சனை செய்த லால்குடி ஜெயராமன் எனும் இசைப் பெட்டகத்தின் 90-ம் ஆண்டு பிறந்த நாளில் அவரது அமர கானங்களை கேட்டு ஆனந்திப்போம்!
- கட்டுரையாளர், தொடர்புக்கு : srikamakshi.sankara@gmail.com