

ஓவியர் வேதா
ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக, அழகாக, கம்பீரமாகத் தோன்றும் இந்த சங்கர நாராயணர் சிற்பம், ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் இருக்கிறது. உச்சி முதல் பாதம்வரை சங்கரரையும் நாராயணரையும் தனித்தனியாக வேறுபடுத்தி ஒரே சிற்பமாக வடித்துள்ளார் சிற்பி.
தலையில் வலதுபுறம் சிவனின் ஜடாமுடியின் அமைப்பும், இடதுபுறம் மகாவிஷ்ணுவின் கிரீட அமைப்பும் அருமையாக வித்தியாசப்படுத்தப் பட்டுள்ளன. மார்பில் தவழும் முத்தாரங்களும், அணிமணிகளும், முப்புரி நூலும், இடையில் உள்ள ஆடையும் ஆபரணங்களும் சிறப்பாக உள்ளன. வலப்புறத்தில் சிவ அம்சமான மழுவும், அபயஹஸ்தமும் காட்டப்பட்டுள்ளன. கரங்களில் அணிகலன்கள் சிறப்பாக இருந்தாலும், கால் பகுதியில் தண்டை இல்லாமல் இருப்பது சற்று கம்பீரக் குறைவாகவே உள்ளது. இடதுபுறம் மகாவிஷ்ணுவின் அம்சமாக கரங்களிலும், தோள் பகுதியிலும் மிகவும் சிறப்பாக அணிகலன்கள், வங்கிகள் அமைந்துள்ளன.
இடுப்பில் இருந்து கால்வரை பட்டுப் பீதாம்பரங்களும், காலில் தண்டையும் சிறப்பாக உள்ளன. பொதுவாக சங்கர நாராயணர் உருவத்தில் மகாவிஷ்ணுவின் கரத்தில் பெரும்பாலும் சங்குதான் காணப்படும். ஆனால், இங்கு வித்தியாசமாக பிரயோகச் சக்கரமாக காட்டப்பட்டுள்ளது.
யார் கண்டது? எந்த அசுரச் சகோதரர்கள் பிரம்ம தேவரிடம், சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஒரு அம்சத்தால் மட்டுமே எங்களை அழிக்க முடியும் என்று ஒரு வரத்தைப் பெற்றிருக்கலாம். அவர்களை சம்ஹாரம்செய்ய இருவரும் இணைந்து ஓர் உருவமாக பிரயோகச் சக்கரத்துடன் புறப்பட்டு விட்டனர் போலும்.