

ஒருநாள் புத்தரின் இடத்துக்கு வந்த நாடோடி, "ஞானமடைந்தவன் மரணமடையும்போது என்ன நிகழ்கிறது? அவர் எங்கே போகிறார்?” என்று கேட்டார்.
புத்தர் அந்த நாடோடியை நோக்கி, சுற்றியுள்ள சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்பை மூட்டச் சொன்னார்.
நாடோடியும் மரக்குச்சிகளையும் சுள்ளிகளையும் பொறுக்கி நெருப்பை மூட்டினார்.
இப்போது நாடோடியை நோக்கி, என்ன நடக்கிறது? என்று புத்தர் கேட்டார். தீ நன்றாகப் பற்றி எரிகிறது என்று பதில் சொன்னார் நாடோடி.
இன்னும் கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கித் தீயிலிடுமாறு கூறினார் புத்தர்.
இப்போது என்ன நடக்கிறது என்று கேட்டார் புத்தர். இன்னும் நன்றாகப் பற்றி எரிகிறது என்றார் நாடோடி.
பிறகு, “இனிமேல் சுள்ளிகளை இட வேண்டாம்" என்று கூறினார் புத்தர். தீ அவிந்துபோனது. அதைக் காண்பித்து, நெருப்புக்கு என்ன ஆனது என்று நாடோடியிடம் புத்தர் கேட்டார்.
நெருப்பு போய்விட்டது என்று நாடோடி பதிலளித்தார்.
"நீங்கள் சொல்வது சரிதான். நெருப்பு எங்கே போனது? முன்னால் போனதா? பின்னால் போனதா? வலப் பக்கம் போனதா? இடப் பக்கமா?” என்று கேட்டார் புத்தர்.
"நெருப்பு எங்கே தோன்றியதோ அங்கேயே போய்விட்டது. வேறெங்கும் போகவில்லை.” என்று பதிலளித்தார் நாடோடி.
“ஆம். அதுதான் சரி. ஞானமடைந்த ஒருவருக்கும் மரணத்துக்குப் பின்னர் அதுவே நடக்கிறது.”