

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத வர்களே! உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துகொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடி யதுடன், அம்மாவுடன் வீண் வாக்குவாதங்களையும், உடல்நலக் குறைவுகளையும் கொடுத்துவந்த ராகுபகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனிச் சிறப்பாக நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாயின் ஆரோக்யம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகள் என உங்களின் நட்பு வட்டம் இனி விரியும்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் ஆதரவு பெருகும். அவருக்கிருந்த நோய் விலகும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியைக் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, ஒற்றைத் தலை வலி வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சில சமயங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். கல்வித் தகுதியில் சிறந்த நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் தடுத்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக் கொடுத்து போங்கள். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றித் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.
அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கௌரவப் பதவி தேடி வரும். என்றாலும் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சில நாட்கள் தூக்கம் குறையும்.
விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். தோற்றப் பொலிவு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். இந்த ராகு, கேது பெயர்ச்சி நட்டாற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த உங்களைக் கரையேற்றுவதுடன் புதிய திருப்பங்களையும், வசதியையும் ஏற்படுத்தும்.
| பரிகாரம் வேலூர் மாவட்டம், காங்கேயநல்லூரில் வீற்றிருக்கும் சுப்பிரமணியரைச் சென்று வணங்குங்கள். தொட்டதெல்லாம் துலங்கும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |