Published : 28 Aug 2020 10:29 am

Updated : 28 Aug 2020 10:29 am

 

Published : 28 Aug 2020 10:29 AM
Last Updated : 28 Aug 2020 10:29 AM

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - கும்ப ராசி வாசகர்களே

zodiac-facts

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

எப்போதும் நியாயத்தைப் பேசும் யதார்த்தவாதிகளே! உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.


ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்து கொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமையால் மன இறுக்கம் அதிகமாகும். சொத்து வாங்கும் முன் தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்ப்பது நல்லது. உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் எதிர்ப்புகள், விமர்சனங்கள் அதிகமாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பழைய கடன், பகையை நினைத்துக் கலங்குவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்து கொடுத்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமண முயற்சிகள் சற்றுத் தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக்கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமையால் மன இறுக்கம் உண்டாகும். உயரதிகாரி களின் பார்வை உங்கள் மீது திரும்பும். அவர்களிடம் கவனமாக இருங்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு நல்லது செய்துவந்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்து செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் திடீர்ப் பணவரவு உண்டு. புதிய யோசனைகள் மனத்தில் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் அழகு, அறிவு கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். புது வேலை கிடைக்கும். சொந்தமாகச் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் வருமானம் உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. இந்த ராகுகேதுப் பெயர்ச்சி உங்களைப் பக்குவப் படுத்துவதுடன் பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஜனமே ஜெய ஈஸ்வரரைச் சென்று வணங்குங்கள். நீண்ட நாள் கனவு நினைவாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல


ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்ராகுகேதுராகுவின் பலன்கள்ராகுபகவான்நட்சத்திர சஞ்சாரம்கேதுவின் பலன்கள்கேதுபகவான்பரிகாரம்ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்Zodiac Factsகும்ப ராசி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author