Published : 28 Aug 2020 10:07 am

Updated : 28 Aug 2020 10:07 am

 

Published : 28 Aug 2020 10:07 AM
Last Updated : 28 Aug 2020 10:07 AM

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - தனுசு ராசி வாசகர்களே

zodiac-facts

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.


ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் நின்றுகொண்டு உங்களைத் திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்துவைத்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். சந்தேகத்தினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவிக்கு இனி ஆரோக்யம் கூடும்.

தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்சனைகளில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர் பயணங்கள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன், கழுத்து வலி, தொண்டை வலி, சைனஸ் இருப்பதைப் போல் தலை வலி வந்து நீங்கும். கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைத் தவறானப் போக்கிற்குத் தூண்டுவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.

கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தீரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவரின் ஆதரவுப் பெருகும். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் உதவிகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத்தடைகள், தலைச் சுற்றல், நெஞ்சுவலி தந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சித் தெரியும். உடல் ஆரோக்யம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைபட்ட திருமணம் முடியும். பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துப் போகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் செலவுகள் அதிகமாகும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் திடீரென்று ஒருவித மனோபயம், முன்கோபம், வீண் டென்ஷன், அலர்ஜி, நரம்புச் சுளுக்கு, தோலில் நமைச்சல் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் சந்தேகங்களைத் தவிர்க்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் பயனடைவீர்கள். தள்ளிப் போன சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும்.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் அழகு, அறிவு, ஆரோக்யம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஷேர் மூலம் பணம் வரும். இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில் கேதுவால் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், ராகுவால் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.

பரிகாரம்

விழுப்புரம் மாவட்டம், பூவரசன் குப்பம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீநாகேஸ்வரரைச் சென்று வணங்குங்கள். கெடுபலன்கள் குறையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தனுசு ராசிராகு - கேது பெயர்ச்சி பலன்கள்ராகுகேதுராகுவின் பலன்கள்ராகுபகவான்நட்சத்திர சஞ்சாரம்கேதுவின் பலன்கள்கேதுபகவான்பரிகாரம்ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்Zodiac Facts

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author