

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
நல்ல நிர்வாகத்திறனும், நினைத்ததை முடிக்கும் மனோ சக்தியும், எதிலும் தெளிவாக முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டவர்களே. உங்கள் ராசிக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதி எனப் பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் வந்தமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்குக் குழந்தைபாக்யம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் மன இறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகளையும், பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு, வீடு கட்ட தொடங்குவது நல்லது.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்து போகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் வீண் விமர்ச னங்கள், மறைமுக எதிர்ப்புகள், கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். திருமணப் பேச்சுவார்த்தை தாமதமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் செல்வம், செல்வாக்கு உயரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தொழிலதிபர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். சிறுக சிறுகச் சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பீர்கள். இந்த ராகு - கேது மாற்றம் உங்களுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை வெளிப்படுத்துவதுடன், வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை அமைத்துத் தருவதாகவும் அமையும்.
| பரிகாரம் மதுரை மாவட்டம், பாலமேடு கெங்கமுத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகம்மாளை சென்று வணங்குங்கள். நினைத்தது நிறைவேறும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |