Published : 27 Aug 2020 09:31 am

Updated : 27 Aug 2020 09:31 am

 

Published : 27 Aug 2020 09:31 AM
Last Updated : 27 Aug 2020 09:31 AM

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - மேஷ ராசி வாசகர்களே

zodiac-benefits

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

பொதுப்பலன்


நிகழும் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16-ம் நாள் 01.09.2020 செவ்வாய்க்கிழமை, சுக்லபட்சத்து பௌர்ணமி திதி, அவிட்டம் நட்சத்திரம், அதிகண்டம் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம், ஜுவனும் நிறைந்த சித்த யோகத்தில், சூரியபகவான் ஹோரையில், பஞ்சபட்சியில் மயில் அரசாட்சி செலுத்தும் நேரத்தில் மதியம் மணி 2.10க்கு மிருகசீரிஷம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ஸ்திர வீடான ரிஷப ராசியில் ராகுபகவானும், கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் ஸ்திர வீடான விருச்சிக ராசியில் கேது பகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 23.9.2020 புதன்கிழமை ராகுவும், கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராகுபகவானின் பொதுப்பலன்கள்

கரு நாகமாகிய ராகுபகவான் புதனின் வீடாகிய மிதுன ராசியில் கடந்த ஒன்றரை வருடகாலம் அமர்ந்து இனம் தெரியாத மனசங்கடங் களையும், உலகெங்கும் நுண்கிருமிகளில் தொற்று நோய்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் தந்தார். அப்படிப்பட்ட ராகு இப்போது மிதுனத்தைவிட்டு விலகி அசுர குருவாகிய சுக்ரனின் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் மக்களிடையே போராட்டக் குணம் அதிகரிக்கும். வைரஸ் தொற்று நோய் குறையும். ஆனால் கண்நோய் அதிகரிக்கும்.

மாணவர்கள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவர். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள். நீதிமன்றங்களின் கை ஓங்கும். காலப் புருஷத் தத்துவப்படி இரண்டாம் வீட்டில் ராகு அமர்வதால் பொருளாதாரம் மோசமாகும். தனிமனித வருமானம் குறையும். வங்கிகளில் பணப் பரிமாற்றம் குறையும். பூச்சிகளாலும், சூறாவளிக் காற்றாலும், வெள்ளப் பெருக்கினாலும் விவசாயம் பாதிக்கும். அறுவடை நேரத்தில் மகசூல் பாதிக்கும்.

தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையும். கிராமங்களிலும் நவீன வசதிகள் பெருகும். பசுமாடு, காளைகள் மற்றும் கால் நடைகளுக்கு வினோதமான நோய்கள் பரவி அவற்றின் எண்ணிக்கை குறையும். புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்களின் உடல்நிலை பாதிக்கும். சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி அடையும். புதியவர்கள் பிரபலமாவார்கள். தியேட்டர், ஜுவல்லரி பாதிக்கும். பால் பொருட்கள், அழகு சாதனங்கள் ஜவுளி உற்பத்தி பாதிக்கும்.

ஆனால் ராகுவை குருபகவான் 15.11.2020 முதல் 05.04.2021 மற்றும் 15.09.2021 முதல் 12.11.2021 வரை உள்ள காலக்கட்டத்தில் பார்வையிட இருப்பதால் ராகுவால் ஏற்படும் கெடு பலன்கள் குறைந்து யோகமான பலன்கள் அதிரிக்கும். மக்கள் ஆரோக்யத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள். கறுப்பு நிற தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

கேதுபகவானின் பொதுப்பலன்கள்

காலப்புருஷ தத்துவப்படி இதுவரை ஒன்பதாம் வீடான தனுசில் அமர்ந்து உலகில் பணப் புழக்கமே இல்லாமல் எல்லாவற்றையும் முடக்கிய செந்நாகமாகிய கேதுபகவான் இப்போது செவ்வாய் வீடான விருச்சிகத்தில் வந்து அமர்வதால் சொத்து வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்தம் சார்ந்த நோய்கள் குணமாகும். மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குச் சில சலுகைகள் கிடைக்கும். செங்கல் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கும். மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் ஆரோக்யமடைவார்கள்.

வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்ட வேதிப் பொருட்களை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள். அணு ஆராய்ச்சியில் இந்தியா சாதிக்கும். ரியல் எஸ்டேட் கொஞ்சம் சூடு பிடிக்கும். சாலை விபத்துகள் பெருகும். பாலியல் பலாத்காரம் செய்வோர் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள். காவல்துறை, ராணுவம், உளவுத் துறை, தீயணைப்புத் துறைகள் நவீனமாகும். ஆற்று மணல், மலை, குளங்கள், அருவிகள் உள்ளிட்ட இயற்கை வளம் அழிக்கப்பட்டுத் தொழிற்சாலைகள் உருவாகும்.

மேஷ ராசி வாசகர்களே

ஆறாம் அறிவுக்கு அடிக்கடி வேலை தருபவர்களே. உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் நல்ல திருப்புமுனை களையும், மன தைரியத்தையும், வி.ஐ.பிகளின் நட்பையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைபட்டுப் பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் மனத்தில் ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புதுச் சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். ஆனால், புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். உத்யோகத்தில் பொறுப்பு கள் அதிகமாகும். ஒரு அதிகாரி உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார். சக ஊழியர்களை அனுசரித்துப் போக வேண்டியிருக்கும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும், பணப்பற்றாக்குறையையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால், எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். உத்யோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டுக்குச் செல்ல நேரிடுவதால் குடும்பத்தில் சின்ன சின்னக் கருத்து மோதல்கள் வரும். எதிர்பார்த்த பணம் வரும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் எல்லா வற்றையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குச் சுமுக தீர்வு காண்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், தோல்வி மனப்பான்மை, வீண்பழி, முன்கோபம் வந்து செல்லும். அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வேலைச்சுமை, குடும்பத்தில் சச்சரவு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பணப்பற்றாக்குறை வந்து செல்லும்.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானம் இவற்றுள் ஈடுபாடு அதிகரிக்கும்.

இந்த ராகு - கேது மாற்றம் சுற்றியிருக்கும் சொந்தபந்தங்களின் உள்மன ஓட்டங்களை உணர வைப்பதுடன், காலத்துக்குத் தகுந்தாற்போல் உங்களைத் தயார்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் எனும் ஊரில் அருள்பாலித்துக் கெண்டிருக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரரைச் சென்று வணங்குங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


ராகு - கேதுபெயர்ச்சி பலன்கள்மேஷ ராசி வாசகர்களேமேஷ ராசிபொதுப்பலன்கேதுபகவான்ராகுவின் பலன்கள்கேதுவின் பலன்கள்பரிகாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author