

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
மற்றவர்களுக்கு முன் மாதிரி யாக நடந்துகொள்பவர்களே. உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப் போட்ட ராகுபவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் சோம்பல் நீங்கும். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். சுபகாரியங்களால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே! இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் ஒருவிதப் படபடப்பு, பயம், வீண் செலவுகள், முன்கோபம் வந்து விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் திடீர்ப் பயணங்களால் செலவுகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மன உளைச்சலால் ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். அரசாங்க விஷயங்கள் அலைச்சலின் பேரில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் புது உத்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துகொண்டு காரியத்தடை, மன உளைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு என உங்களைப் பலவகையில் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாம் வீட்டிலே வந்தமர்கிறார். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புது வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வ தால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள்.
விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் வீண் விரயம், பண இழப்புகள், எதிலும் ஆர்வமின்மை, அசதி, சோர்வு வந்து விலகும். தாயாருக்கு வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். மனைவிக்குச் சிறுசிறு பிரச்சினை வந்து நீங்கும். இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி விரக்தி அடைந்திருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் எங்கும் முதல் வரிசையில் அமர வைக்கும்.
| பரிகாரம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகநாதரைச் சென்று வணங்குங்கள். செல்வம் சேரும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |