

என் மெளனம் பேசவில்லை என்றால் என் நாவின் பேச்சால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? என்று கேட்டவர் மெஹர்பாபா. இந்தியாவில் சென்ற நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய ஆன்மிக ஆசிரியர்களின் வரிசையில் வந்த மெஹர்பாபாவின் மொழியும் மௌனம்தான். நாற்பத்தி நான்கு வருடங்கள் பேச்சற்று மெளனத்தில் ஒடுங்கியவர் மெஹர்பாபா.
பேச்சு நின்றது
மெஹர்பாபா ஜொராஷ்ட்ரியப் பெற்றோருக்குப் பிறந்தவர். திருமணம் செய்துகொள்ளவில்லை. 1914-ல் ஹஜ்ரத் பாபாஜான் என்ற ஒரு பெண் ஞானியைத் தமது பரிபூரண குருவாக ஏற்று சரண் அடைந்தார். இதற்குப் பின்னரும் நான்கு குருமார் களிடம் ஞானோபதேசம் பெற்றார். தமது ஆன்மிக அனுபவங்களைப் புத்தகங்க ளாக எழுதிக்கொண்டே வந்தவர் 1923-ல் முற்றிலுமாக எழுதுவதை நிறுத்தி விட்டார். பிறகு பேச்சும் நின்றது. உலகெங்கும் இவருக்குச் சீடர்கள் ஏற்பட்டனர்.
ஆங்கில எழுத்துப்பலகை வழி அவர் கூறிய தத்துவ மொழிகள் புத்தகங்களாக வெளிவந்தன. இவற்றுள், ‘கடவுள் பேசுகிறார்’ என்ற புத்தகம் தலைசிறந்த ஒன்று. அவரது சைகைகளும் அர்த்தம் செறிந்தவை.
“உபதேசிக்க அல்ல, உங்களை விழிக்கப் பண்ணவே வந்தேன்” என்பது இவரது புகழ்பெற்ற வாக்கு. போதுமான அளவு வார்த்தைகள் சொல்லப்பட்டுவிட்ட உலகில் மெஹர்பாபாவின் மௌனம் அர்த்தம் பொருந்தியது.
‘கவலை வேண்டாம் களிப்புற்றிரு’ என்பதே மெஹர்பாபாவின் உபதேசச் சாரம். சிரிப்புக் கும்மாளமிடும் அவரது புகைப்படத்தைப் பார்ப்பவர் களைக்கூட, அது தொற்றாமல் இராது.
காந்தியுடன் சந்திப்பு
1931-ம் ஆண்டு எஸ்.எஸ். ராஜபுதனா கப்பலில் மகாத்மா காந்தி இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்கு இங்கிலாந்து சென்றபோது அதே கப்பலில் மெஹர்பாபாவும் சென்றார். இருவரும் மூன்று முறை சந்தித்ததாகவும் மணிக் கணக்கில் உரையாடியதாகவும் பிரிட்டிஷ் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தைச் சிரிப்போடும், குதூகலத்தோடும் சைகை மொழிகளால் லாவகமாகப் பேசும் மெஹர்பாபா அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனார். தமிழகம்வரை இன்றும் அவரைப் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
தொலைந்து போ
மெஹர்பாபாவின் தத்து வங்கள் மண்ணில் வாழும் பாமர மக்களுக்கானவை. கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் புழுதியாக இருக்குமாறு அறிவுரை தருகிறார் பாபா. புழுதிக்கு எவ்விதச் சிந்தனையும் இல்லை. அது மிதிபடுகிறது. நசுக்கப்படுகிறது. பயபக்தியோடு நெற்றியில் இடப்படுகிறது. காற்றிலே அலைகிறது. நீரிலே அடித்துச் செல்லப்படுகிறது.
எல்லாம் அதற்கு ஒன்றுதான். பூரண சரணாகதிக்கு இலக்கணமாகப் புழுதியைத்தான் சொல்வேன் என்கிறார் மெஹர்பாபா.
தேடாதீர்கள் கிடைக்கும்
நாம் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் நாம் தொலைந்துபோக வேண்டும். ஆகவே, இங்கு நஷ்டமென்பது லாபமாய் மாறிவிடுகிறது அல்லவா? என்று எழுதிக்காட்டி சிரித்தவர் அவர்.
தேடாதீர்கள் கிடைக்கும் என்று அவர் விரல்கள் காற்றில் எழுதிக்காட்டியபோது பக்தர்கள் திகைத்தனர். அதாவது உலகியல் இன்பங்களைத் தேடாதீர்கள். ஆன்மிக இன்பம் கிடைக்கும். லெளகீக விஷயங்களைத் தேடாதீ்கள். கடவுள் கிடைப்பார். தன்னை மறுத்தலே இறை அனுபூதி கிடைக்கும் வழி. வழிபாடு என்பது இறைவனை நோக்கி உங்கள் இருகரங்களையும் நீட்டுவது அல்ல. முற்றிலுமாகத் தன்னை மறுத்தால் ஆன்மிகப் புதையலை அடைதல் கூடும்.
இரண்டு பெரிய கார் விபத்துகளில் சிக்கியதால் இவரது இயக்கம் நின்றுபோனது. சக்கர நாற்காலியில் இவரது உலகப் பயணம் தொடர்ந்தது. அந்த நிலையிலும் சிரிப்புதான். விரல்களின் சைகை நர்த்தனம்தான். நீண்ட தமது சிகையைப் பின்தள்ளி அவர் சிரிக்கும் கோலம் அவரைத் தேடிவந்தவர்களைப் பரவசப்பட வைத்தது.
ஒரு கட்டத்தில் ஆங்கில எழுத்துப்பலகையைக்காட்டி உபதேசிப்பதையும் நிறுத்திக் கொண்டார். உடல் மொழியும், கைவிரல் சைகைகளுமே போதுமானதாக இருந்தன. இன்னும் பேசவே ஆரம்பிக்காத குழந்தையின் சைகைகளை அதன் வீட்டார் புரிந்து கொள்வதுபோல அவை இயல்பாக இருந்தன.
சூஃபி தத்துவ அறிமுகம்
சூஃபி தத்துவம் பற்றியும் சூஃபி ஞானிகள் பற்றியும் இந்தியாவுக்கு அறிமுகம் செய்தவர் மெஹர்பாபா. ஜலாலுதீன் ரூமியின் காலகட்டத்தைச் சேர்ந்த ஞானியும் கவிஞருமான ஹபீஸின் படைப்புகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
முடிவற்று நீள்கிறது பயணம். இலக்கை எட்டிய உணர்வு ஏற்படும் போதுதான் எவ்விதப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற போதம் உண்டாகிறது. இங்கே இருந்து இங்கேயே வந்து சேரும் பயணம் அது. ஒரு சூஃபி ஞானி சொல்லுகிறார் ஈச்சங்கனியை நான் பறித்தபோது (அதாவது மெய்யுணர்வு தோன்றியபோது) அக்கனி என்னுள்ளேயே பழுத்தது என்று தெரிய வந்தது
“என்னுளே விளங்கி, என்னுளே பழுத்து, என்னுளே கனிந்த, என்னுடை அன்பே” என்கிறார் வள்ளலார்.
மெஹராபாதில் உள்ள அவரது சமாதிக்குச் சாதிமத இன பேதங்களைக் கடந்து உலகெங்குமிருந்தும் அவரைப் பின்பற்றுவோர் வருகிறார்கள். சடங்குகள் எவையும் பின்பற்ற வேண்டாம் என்பது மெஹர்பாபாவின் அறிவுரை. மெஹர்பாபாவின் மெளனம் தொடர்கிறது. கடவுள் பேசுகிறார்!
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com