அம்பிகையைத் துதிக்காத பாவத்தையும் நீக்கும் அந்தாதி!

அம்பிகையைத் துதிக்காத பாவத்தையும் நீக்கும் அந்தாதி!
Updated on
1 min read

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை

அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை

புவிஅடங்கக்

காத்தாளை அங்கையிற் பாசாங்குசமும்

கரும்பும் அங்கை

சேர்த்தாளை, முக்கண்ணியைத்

தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே…

என்பதுதான் அபிராமி பட்டர் தனது அபிராமி அந்தாதியின் மூலமாக வெளிப்படுத்தும் ஒட்டுமொத்தக் கருத்து.

ஒவ்வொரு பாடலின் கடைசியில் வரும் வார்த்தை, அடுத்த பாடலின் தொடக்க வார்த்தையாக இருக்கும். இதுதான் அந்தாதிப் பாடல்களின் இலக்கணம். இந்த முறையில் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியில் நூறு பாடல்கள் உள்ளன. தினம் ஒரு அந்தாதிப் பாடலை பக்தர்களுக்கு அறிமுகம் செய்யும் அரிய பணியைச் செய்துவருகின்றது நெய்வேலி  தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயம். பக்தியோடு, சமூகச் சூழல், தத்துவ விளக்கம், நன்னெறி போன்ற சீர்திருத்தக் கருத்துகளுடன் அபிராமியின் புகழை நேர்த்தியான சொற்பொழிவு அனுபவத்துடன் தினம் தினம் அளித்துவருகிறார் சுதா பழமலை.

இந்த இக்கட்டான கரோனா தொற்றுக் காலத்தில் நாம் இறுகப் பற்ற வேண்டியது இறை நம்பிக்கையைத்தான் என்பதைத் தினம் தினம் ஆணித்தரமாக நம் மனத்தில் பதியவைக்கின்றது சுதா பழமலையின் சொற்பொழிவு உத்தி.

ஞானத்தையும் நல்வித்தையையும் பெறு வதற்கும், பிரிந்தவர் ஒன்று சேரவும், எவரிடமும் சொல்லமுடியாத மனக் கவலைகளைத் தீர்ப்ப தற்கும்… இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தடையையும் நீக்கவும், பற்றுகளை நீக்கவும் நமக்கு அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியின் பாடல்கள் எப்படி உதவு கின்றன என்பதைத் தெளிந்த நீரோடையாகத் தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் விளக்குகிறார் சுதா பழமலை.

21-ம் பாடல் மிகவும் விசேஷமானது. இந்தப் பாடலைப் பாராயணம் செய்வதன்மூலம் இதுவரை அம்பிகையைத் துதிக்காததன் பாவமும் நீங்கும் என்கிறார் அபிராமி பட்டர். 20-ம்பாடலின் இறுதியில் `பூரணாசல மங்கலையே’ என்று நிறைவு பெற்றிருக்கிறது. அந்தாதியின் இலக்கணப்படி `மங்கலை’ என்று 21-ம் பாடல் தொடங்குகிறது. அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களும் இந்தப் பாடலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. எல்லா சிவாலயங்களிலும் சிவனோடு இடமிருந்து உடனாய அருளும் சக்திக்கு `மங்கலை’ என்றே திருநாமமிட்டு அழைப்பர் என்பது போன்ற ஆன்மிகத் தகவல்களையும் தன்னுடைய சொற்பொழிவின் ஊடாக பக்தர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் அருள் பணியையும் மிகவும் இயல்பாகச் செய்கிறார் சுதா பழமலை.

தினம் ஒரு அந்தாதியைக் காண: https://bit.ly/2PD9Gks

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in