

எம்.ஏ. ஜோ
பாவிகள் என்று சொல்லப்பட்ட வர்களுடன் இயேசு நெருங்கிப் பழகியதைக் குறைசொன்ன பரிசேயர்களுக்கு இயேசு இந்தக் கதையைச் சொன்னார்.
ஒரு ஆயனிடம் நூறு ஆடுகள் இருந்தன. ஒரு நாள் அவற்றில் ஒன்றைக் காணவில்லை. அவர் ஆடுகள் ஒவ்வொன்றின் மீதும் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட நல்ல ஆயன் என்பதால், மற்ற தொண்ணூற் றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல்போன ஆட்டைத் தேடிச் சென்றார். அலைந்து திரிந்து கடைசியில் அந்த ஆட்டைக் கண்டுபிடித்ததும், மகிழ்ச்சியோடு அதைத் தனது தோளில் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து, அண்டை வீட்டாரையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டாடினார்.
காணாமல்போன ஆட்டைக் கவலையோடு தேடி, அதனைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியோடு தோளில் தூக்கி வந்த ஆயனைப் போல, வழிதவறி வாழ்க்கையில் தவறு செய்யும் மனிதர்களைத் தேடிச் செல்பவர் கடவுள்.
ஆயனின் மந்தையிலிருந்து பிரிந்து கண்போன போக்கில் போகும் ஆட்டைப் போல நாமும் பல வேளைகளில் இறைவனை விட்டு, அவரை நம்பிப் பின்பற்றும் நல்லோரின் கூட்டத்தை விட்டு, நம்மீது அக்கறை கொண்ட குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய்த் தொலைந்து போகலாம். அப்படிப் போய்விட்டாலும் கூட நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. காரணம், இறைவன் நம்மைத் தேடி வருவார். அவர் நம்மைத் தேடி வருவார் என்பதற்கு என்ன பொருள்?
ஆங்கிலம் புழங்கும் இடங்களிலெல்லாம் மக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு உளமொன்றிப் பாடுகிற கிறிஸ்தவப் பக்திப் பாடல் ஒன்று இருக்கிறது. பெரும் தலைவர்களின் இறுதிச்சடங்கில் மட்டுமல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க அரிதான தருணங்களிலெல்லாம் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரே குரலாய் இயல்பாகப் பாடியுள்ள பாடல் இது.
கருப்பின மக்களின் தலைவர் மார்டின் லூதர் கிங் வாஷிங்டன் நகரில் ‘கனவொன்று எனக்கு உண்டு’ (I Have a Dream) எனும் புகழ்பெற்ற உரையை ஆற்றியபோது - சர்வாதிகாரத்தின் சின்னமான ‘பெர்லின் சுவர்’ விழுந்தபோது - இனவெறி அரசை எதிர்த்துப் போராடியதால், 27 ஆண்டுகள் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்தபோது - இப்படி நெகிழ்ச்சியான நேரங்களில் எல்லாம் பாடப்பட்ட புகழ்பெற்ற அந்தப் பாடல் ‘அமேஸிங் கிரேஸ்’ என்ற சொற்களோடு தொடங்குகிறது. ‘வியப்பூட்டும் இறையருள்’ என்று அதனை மொழிபெயர்க்கலாம்.
இந்தப் பாடலை எழுதியவர் ஜான் நியூட்டன் எனும் ஆங்கிலேயர். இங்கிலாந்திலிருந்து கப்பலில் சென்று ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கக் கருப்பின மக்களைச் சிறைப்பிடித்து வந்து அடிமைகளாக விற்றவர். அவர் செய்யாத குற்றங்களே இல்லை என்னும் அளவுக்கு நெறிகெட்டு வாழ்ந்த மனிதர். ஒரு கப்பல் பயணத்தின் போது, பெரும் புயலொன்று சீறியெழுந்து, மூழ்கப் போகும் வேளையில், இவர் முதல் முறையாக கடவுளை நினைத்து, தன்னைக் காக்கும்படி அழுது மன்றாடினார்.
புயல் அடங்கி, உயிர் பிழைத்து வந்த பிறகு, மெல்ல மெல்லத் தான் செய்த தீமைகளையெல்லாம் விட்டு விலகி, எந்தக் கருப்பின மக்களைத் துன்புறுத்திக் கடத்தி அடிமைச் சந்தையில் விற்றாரோ, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அளவுக்கு அவர் மாறினார்.
அவர் 1772-ம் ஆண்டு எழுதிய பாடல் தான் இது. தொலைந்து போன ஆடாக, எல்லாவற்றையும் இழந்த நிலையிலும், அவரைத் தேடி வந்து மீட்டது இறையருளே என்பதை அவர் உணர்ந்து எழுதியதால் தான், அது இன்று வரை பாடுவோர் கண்களைப் பனிக்கச் செய்கிறது.
எங்கோ கிடந்தேன் எனைத் தேர்ந்தே - உன்
மந்தையில் சேர்த்தே அன்பளித்தாய்
சிந்தை இழந்தேன் உனைப் பிரிந்தேன் - நான்
சென்ற இடம் தேடி வந்து நின்றாய்
இதமாய் தோளில் எனைச் சுமந்தே - உன்
இதயத்துக்கருகே இடமளித்தாய்.
நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடவுள் நம்மைத் தேடி வருபவர் என்றாலும், கடைசியில் மீட்கப்படுவது நம் கையில் தான் இருக்கிறது.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com