

ராமபிரான் சீதாப்பிராட்டியாருடன், தம்பியுடன் வனம் புகுந்தபோது கங்கை ஆற்றைக் கடக்கும் இடம் வந்தது. கங்கை நதியைக் கடக்கும் முன்பு கங்கைக்கரையில் குகன் தங்கவைத்துப் பாதுகாப்பாக இருந்து அன்றிரவு அவர்களின் பசிக்குத் தேனும் திணைமாவும் கலந்து கொடுத்து அன்பு மிகுதியால் மீனும் உண்ணத் தந்தார். மீனைக் கண்ட லட்சுமணன் முகம் சுளித்தார். ஆனால் ராமரோ குகனின் பாசமிகுதியைக் கண்டு ஆரத்தழுவி, உன் அன்புக்கு அளவுகோல் இல்லை என்கிறார்.
“உனது உண்மையான அன்பால் எங்கள் நால்வரோடு நீயும் எங்களுடைய சகோதரன் ஆனாய். நீ என் சகோதரனே என நால்வரோடு ஐவரானோம்” என்று எந்தப் பேதமும் பார்க்காமல் கூறுகிறார்.
அன்று இரவு தர்ப்பைப் புல்லைப் பரப்பி பஞ்சணையைப் போலே ஒரு படுக்கையை ஏற்படுத்திக் கொடுத்து ராமனையும் சீதையையும் உறங்கச் செய்கிறார். அன்றிரவு முழுவதும் கண்ணுறங்காமல் பாதுகாப்பாக அவர்களுக்குக் காவலாக நின்றார் குகன்.
அக்கரையில் பரதன், ராமரைத் தரிசிக்க வருவதைக் கண்டு, போருக்கு வருவதாகக் கருதி, குகன் படைகளைத் திரட்டி சண்டைக்கு ஆயத்தமானார். பரதன் விளக்கிய பிறகுதான் சமாதானம் ஆனார் குகன். ராமனிடம் எல்லையில்லாத அன்பு வைத்த குகப்பெருமானைப் போலே, நான் ஒரு சிறு பக்தியும் இறைவனிடம் செலுத்தவில்லையே என்று ராமானுஜரிடத்தில் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள், நம் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com