Last Updated : 06 Aug, 2020 09:33 AM

 

Published : 06 Aug 2020 09:33 AM
Last Updated : 06 Aug 2020 09:33 AM

81 ரத்தினங்கள் 47: வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே

ராமபிரானுக்கு லட்சுமணனைப் போல பரதனும் ஒருவிதக் கைங்கரியதாரி. பரதனைப் பரதாழ்வார் என்பர். பரதனைப் பெற்றதால் கைகேயி சிறப்புப் பெற்றாள்.

ஸ்ரீராமர் வனவாசம் மேற்கொண்ட பிறகு வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக்கொள்வ தற்காக அழைத்தார். அச்சோ! இந்த நாடும், நாட்டு மக்களும் நானும் ராமனின் சொத்துக்கள். ஒரு சொத்து, இன்னொரு சொத்தை எப்படி ஆளமுடியும் என்று கூறி அண்ணனை அழைத்து வருவதற்காக பரதன் வனத்தை நோக்கிப் புறப்பட்டார்.

தன்னை அழைக்க வந்த பரதனிடம், தந்தையின் சொல்படி பதினான்கு ஆண்டு வனவாசம் முடித்துத்தான் அயோத்திக்குத் திரும்புவேன் என்று கூறி ராமன் மறுத்துவிட்டார். மனவருத்தமுற்ற பரதன் ராமனின் பாதுகைகளை வாங்கிவந்து சிம்மாசனத்தில் வைத்து அரசாண்ட கதை நமக்குத் தெரியும். ராமனின் பாதுகைக்கே அவ்வளவு ஏற்றம். இதனைக் கருத்தில் கொண்டே ஸ்ரீநிகமாந்த மகாதேசிகர் பாதுகா சகஸ்ர நாமம் இயற்றினார். விஷ்ணு சகஸ்ர நாமத்தினைவிட சக்தி வாய்ந்தது பாதுகாசகஸ்ர நாமம் என்பர்.

ராமருடன் வந்து கைங்கரியம் செய்து வனவாசம் மேற்கொள்ளவில்லை என்றாலும், நந்தி கிராமத்திலே குடில் அமைத்துப் பாதுகையை வைத்த இடத்திலே இருந்து வணங்கித் தினமும் வழிபட்டு அரண்மனை வசதிகளைத் துறந்து வனத்தில் வாழ்வது போலத் துறவியாக வாழ்ந்தார் பரதர்.

ஸ்ரீராமரின் வருகையை நோக்கி பகவானுக்கு ஒரு தொண்டன் போல காத்திருந்தார்.

பரதனைப் போல நான் இறைவனின் மேன்மையை உணரவில்லையே எனத் தனது சி்ந்தையை நொந்தாள் நமது திருக்கோளூர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x