

உஷாதேவி
வனவாசம் மேற்கொண்ட ஸ்ரீராமனுடன் சீதை பின் தொடா்ந்ததால் அதேபோல ராமனுடைய தம்பியான லட்சுமணனும் வனவாசம் செல்ல ஆயத்தமானார். அவரின் தாய் சுமித்திரையும் சகோதரனை விட்டுப் பிரியாமல் ராமன் செல்லும் வழியெல்லாம் அவருக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் எனக் கட்டளை இட்டாள். ஊன் உறக்கம் இன்றி லட்சுமணன் கைங்கரியம் செய்யத் துணிந்தார். லட்சுமணன், நித்ரா தேவியை வணங்கித் தன் பதினான்கு வருட உறக்கத்தைத் தன் மனைவி ஊா்மிளைக்குக் கொடுத்துவிட்டார்.
ஒரு குழந்தையிடம் தாய் எவ்வளவு பரிவாக இருந்து அன்புகாட்டி பாதுகாப்பாளோ அவ்வளவு பரிவுடன் வனவாசத்தின்போது அண்ணன் ராமனின் பசிக்குக் கனி, கிழங்குகளை அகழ்ந்தெடுத்து நல்ல வசதியாக உறங்கி ஓய்வெடுக்க பா்ணசாலை அமைத்துக் கொடுத்தார். செல்லும் வழியெல்லாம் உடனிருந்து கவனித்துக்கொள்ளும் லட்சுமணனைப் பார்த்து, என் தேவையறிந்து இவ்வளவு சேவை செய்கிறாயே லட்சுமணா நீ என் தந்தை போன்றவன் என்கிறார்.
லட்சுமணரோ நீங்கள் இட்ட கட்டளைப்படி நான் செயல்பட வேண்டும். நீங்கள் இன்றி எச்செயலும் என் இச்சையாகச் செய்ய மாட்டேன் எனக் கரம் குவித்து வணங்கினார்.
சீதையைப் பிரிந்து வருத்தமுற்று வாடும்போது உடனிருந்து காத்தார். யுத்தக் களத்தில் தன் உயிரைப் பெரிதாக நினைக்காமல் போர்புரிந்தார். ராமன் சீதையைக்கூடப் பிரிந்து வாழ்ந்தார். ஆனால், லட்சுமணனைப் பிரிந்து வாழ்ந்திருக்க மாட்டார். லட்சுமணரைப் போலே பெருமாளைப் பின்தொடா்ந்து எந்த அடிமை சேவையும் இறைவனுக்குச் செய்யவில்லையே எனத் தன் மனவருத்தத்தை திருக்கோளூர் பெண்பிள்ளை தெரிவிக்கிறாள்.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com