

எம்.ஏ. ஜோ
‘ஊதாரி மகனின் கதை’ அல்லது ‘ஊதாரி மைந்தனின் கதை’ என்று அறியப்படும் புகழ்பெற்ற கதை இது.
‘ஒரு செல்வந்தருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்...’ என்று தான் இயேசு இக்கதையைத் தொடங்குகிறார். திடீரென்று அவருடைய இளைய மகன், அவரது சொத்தில் தனக்குள்ள பங்கைப் பிரித்துத் தருமாறு கேட்டான். அதிர்ச்சியையும் கவலையையும் மறைத்து, தந்தை அவனுக்குரிய பங்கைப் பிரித்துக் கொடுத்தார்.
அவன் அந்தப் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு, அயல்நாட்டுக்குப் போனான். அங்கே தாறுமாறாக வாழ்ந்து, ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவிட்டு இருந்ததையெல்லாம் இழந்தான். பஞ்சம் வந்தது. பசி தீர வழியின்றி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தான். தன் பன்றிகளை மேய்க்கும் வேலையை அவர் அவனுக்குக் கொடுத்தார். அந்த வேலைக்கும் ஊதியம் கிடைக்கவில்லை. பஞ்சகாலம் அல்லவா? பசியின் கொடுமை தாளாமல், பன்றிகள் உண்ணும் தீவனங்களாவது தனக்கும் கிடைக்குமா என்று அவன் ஏங்கினான். அவை கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.
இன்பக் களிப்பில் மூடிய அவன் கண்களை, பசியின் கொடுமை திறந்தது. “நான் ஏன் இங்கே, இந்நிலையில்? இன்றைய எனது இழிநிலை, நானே தேடிக் கொண்டது தானே? நான் யார்? நான் யாருடைய மகன்? என் தந்தையின் வேலையாட்களாகப் பணிபுரிவோர் வயிறார உண்ணும்போது, அவரது இளைய மகனாகிய நான் ஏன் இப்படிப் பட்டினி கிடந்து சாக வேண்டும்? நான் வாழ நினைத்தால், வீடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதை உணர்ந்தான். ஆனால், திரும்பிச் செல்வது எப்படி?
‘தந்தையின் மனத்தை நோகடித்த நான், அவர் முகத்தில் எப்படி முழிப்பேன்? என்ன சொல்லி என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுவேன்?’ “உம்மை விட்டு, வீட்டை விட்டு ஓடிய நான் உமது மகனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டேன். அதனால், உமது வேலையாட்களில் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்ளும் என்று மன்றாடுவேன்” என்று முடிவுசெய்து, அவன் கிளம்பி வீட்டுக்கு வந்தான்.
அவன் தொலைவில் வரும்போதே தந்தை அவனைப் பார்த்து, ஓடோடி வந்து, ஆரத்தழுவிக் கொண்டபோது, அவன் சொல்ல நினைத்ததைச் சொல்லத் தொடங்கினான். தந்தையோ, தொலைந்து போன மகன் திரும்பி வந்த மகிழ்ச்சியில் தன் பணியாளரிடம், மிதியடிகளும் மோதிரமும் பட்டாடைகளும் கொண்டு வந்து அவனுக்கு அணிவிக்குமாறு ஆணையிடுகிறார். தன் மகன் திரும்பக் கிடைத்த தைக் கொண்டாடப் பெரும் விருந்து தயாரிக்கச் சொல்லுகிறார்.
எதை விளக்க இயேசு இந்தக் கதையைச் சொன்னார்? சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிப்ப தால், தாங்கள் கடவுளுக்கு நெருங்கியவர்கள் என்று நினைத்துக்கொண்ட யூத உயர்குலத்தினர், பாவிகள் என்று சிலரைப் பழித்து ஒதுக்கினார்கள். இயேசு, பாவிகளோடு பழகி, அவர்களோடு விருந்துண்டு, அவர்களைப் பரிவோடு நடத்துவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இறைவன் எனும் அன்புத் தந்தையின் இதயம் எத்தகையது என்பதை அவர்களுக்கு விளக்கவே இயேசு இந்தக் கதையைச் சொன்னார். வீட்டை விட்டுச் சென்றவனை, தன்னை விட்டுப் பிரிந்தவனை, தாறுமாறாய் வாழ்ந்தவனை வெறுத்து, அவனைத் தண்டிப்பதற்காகக் காத்திருப்பவர் அல்ல கடவுள். பிரிந்த மகன் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதே தந்தையாகிய இறைவனின் இயல்பு என்ற உண்மையை விளக்கத்தான் இயேசு இந்தக் கதையைச் சொன்னார்.
சரி, ஒரு செல்வந்தருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் என்று தானே இயேசு இந்தக் கதையைத் தொடங்கினார்? இது இளைய மகனின் கதை. மூத்த மகனுக்கு என்ன ஆனது?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com