Published : 25 Jun 2020 09:29 AM
Last Updated : 25 Jun 2020 09:29 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 120: தன்னை அறிவோம்; தன்னை அறியும் அறிவை அறிவோம்

கரு. ஆறுமுகத்தமிழன்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகம்என்று உணர். (நல்வழி, 40)

குறள் கூறும் உறுதிப் பொருள், வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களின் உபதேசப் பொருள், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தமிழாகிய தேவாரத்தின் உட்பொருள், முனியாகிய மணிவாசகரின் மொழிபாகிய திருக் கோவையார், திருவாசகம் ஆகியவற்றின் உணர்பொருள், திருமூலர் சொல்லாகிய திருமந்திரம் கருதும் மெய்ப்பொருள் எல்லாம் ஒன்றே என்று உணர்க என்கிறாள் நீதிநூல் ஔவை. ஆனால் அதெப்படி? வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு இயக்க நிலைகளில், வெவ்வேறு தேவை கருதித் தோன்றிய வெவ்வேறு நூல்களின் வெவ்வேறு பேசுபொருள்கள் எவ்வாறு ஒரே பொருள் ஆகும்?

வேதங்களின் முடிவாகிய உபநிடதங்கள் உண்மையை ஒற்றைப்படுத்துகின்றன; ‘ஒரே ஓர் உண்மைதான் இருக்கிறது; கற்றவர்கள் அதைப் பலவிதமாகச் சொல்கிறார்கள்’ என்னும் ரிக் வேத முடிவைத் தலைமேல் கொள்கின்றன. ‘யார் என்ன சொன்னாலும் அது நான் சொன்னதன் வேறு வடிவே’ என்பது ‘பானையும் ஒரு வகையில் யானையே’ என்று சொல்வதற்கு நிகர் இல்லையா?

மெய் பொய் அறம்

உபநிடதங்களோடு ஔவை நிகர் வைத்துச் சுட்டிய பிற நூல்களும் அதே பொருளைத்தான் வழிமொழிகின்றனவா? அப்படித் தெரியவில்லை. அறத்தைக்கூடக் குறள் ஒற்றைப்படையானதாக ஆக்குவதில்லை. நிலைப் பன்மைக்குத் தக அறப் பன்மை உண்டு என்றே கொள்கிறது. ஓரிடத்தில் மெய் பேசுவதே அறம் என்னும் குறள் மற்றோரிடத்தில் பொய் பேசுவதும் அறந்தான் என்று உரைக்கும்.

மூவர் தமிழாகிய தேவாரத்தில் அதன் அளவிலேயேகூட ஒற்றை நிலைப்பாடு கிடை யாது. சிவமும் தமிழும் மையப்பொருள்கள் என்ற பொதுமையைத் தாண்டி, அவர்களது சைவத்துக்குள்ளேயே வேத ஆதரவுச் சைவம், வேத மறுப்புச் சைவம் போன்ற நிலை வேறுபாடுகள் துலங்குகின்றன. திருவாசகம் முழுக்க உணர்வுநிலையைப் பாட, திருமந்திரம் அறிவு நிலையைப் பாடுகிறது.

அறத்தையும் இறைமையையும் தொட்டுப் பேசுவதால் இந்நூல்கள் உணர்த்த விரும்புவது ஒன்று என்று ஆகிவிடாது. ஔவையின் இந்தப் பாட்டைப் பொருட்படுத்தாமல் கடந்துவிட வேண்டியதுதான். இதேபோல ஒரு பாட்டு திருமந்திரத் தொகைக்குள்ளும் கிடக்கிறது:

மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ்

மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்

மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே. (திருமந்திரம் 3046)

திருமந்திரம் என்று அறியப்படுகிற திருமந்திரம் மூவாயிரம், திருமந்திரம் முந்நூறு, திருமந்திரம் முப்பது ஆகிய மூன்று நூல்களும் திருமூலனால் எழுதப்பட்டவை; மூன்றும் ஒரே தன்மை உடையவை.

ஆனால் அவ்வாறல்ல. திருமந்திரம் எனப்படும் மூவாயிரம் தனிமுதல் நூல். திருமந்திரம் முந்நூறு என்பது, வசியம், மோகனம், மாரணம் போன்ற குறக்களி வித்தைகளைப் பேசுவது. முப்பது உபதேசம் என்று சொல்லப்படுகிற திருமந்திரம் முப்பது தனி நூலே அல்ல. திருமந்திரம் மூவாயிரத்தின் முதல் தந்திரத்தின் தொடக்கப் பகுதி அது; சைவ சித்தாந்தம், சித்தர் மரபு ஆகியவற்றின் சாரம் பிழிவது. அதன் மேல்விளக்கமாகவே மொத்தத் திருமந்திரமும் எழும்பி நிற்கிறது.

கரு. ஆறுமுகத்தமிழன்

சில பொதுமைப்பாடுகளை அடிப்படை யாகக்கொண்டு பன்மையை அடித்துப் பிசைந்து ஒன்றாகப் பிண்டம் பிடித்துப் பொரி உருண்டைபோல ஆக்கி உருத் தெரியாமல் அழிப்பது ‘நல்வழி’ ஆகாது. இயங்குகின்ற ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு களம், வேறு வேறு தளம், வேறு வேறு மொழி, வேறு வேறு வழி. இவற்றில் திருமந்திரத்தின் தொனி தனி.

தன்னை அறியத் தனக்குஒரு கேடுஇல்லை;

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே. (திருமந்திரம் 2355)

தன்னை அறிக; தன்னை அறியும் அறிவை அறிக; அர்ச்சிக்க வேண்டியது எது என்னும் தெளிவைப் பெறுக. வாழ்க.

திருமூலனுக்குப் பணிவு

ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள்.கறந்தும் குடித்தும் நாம் களைத்திருந்தாலும் திருமந்திரம் மடி வற்றாமல் கறந்திருக்கிறது. கறக்கவும் குடிக்கவும் இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது.

கட்டுரைகளைப் படித்தவர்களும் எளிமையாகப் படித்துக் கடந்து போய்விடவில்லை என்பது அவர்கள் ஆற்றிய மறுவினைகளில் தெரிந்தது.

மின்மடல்கள், தொலைபேசி அழைப்புகள், மெனக்கெட்ட சந்திப்புகள், பார்த்த இடத்துப் பண்புரைகள், பாராட்டுகள், இடித்துரைப்புகள், திருத்தங்கள் என்று உரையாடியோர், உறவாடியோர் பலர்.

அனைவர்க்கும் அன்பு. விரிந்த வாசகத் தளத்தில் திருமந்திரக் கடை விரிக்க ஆனந்த ஜோதியில் இடம் தந்த இந்து தமிழ் திசைக்கு வணக்கம். பக்தியைப் பின்னிறுத்தி அறிவை முன்னிறுத்தி விடுதலை விழையும் திரு மந்திரத்துக்குப் போற்றுதல். திருமூலனுக்குப் பணிவு. நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

(நிறைவுற்றது)

கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x