

புதிய தொடர்
எம்.ஏ. ஜோ
பெண் பார்க்கும் சடங்கின்போது, சின்னவள் அக்காவின் காதில் கிசுகிசுக்கிறாள் “ஏன்க்கா, போன வாரம் உன்னைப் பொண்ணு பார்க்க வந்த ஆள், இவனைவிட உயரம், இவனைவிட நல்ல நிறம் இல்லையா?” இன்று வந்திருப்பவனைச் சென்ற வாரம் வந்தவனோடு ஒப்பிடுவது தவிர்க்க இயலாத ஒன்று. அறிந்தோ, அறியாமலோ நாம் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
“உங்க மூணு பிள்ளைகளும் உங்களிடம் தான் வளர்ந்தார்கள். மூத்தவன் படித்து, இவ்வளவு நல்ல பதவிக்கு வந்துவிட்டான். ரெண்டாவது பையன் காலேஜ் முடிச்சு வேலை தேடிக் கொண்டு இருக்கிறான். கடைசி பையன் பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை. என்ன பண்ணப் போகிறான்?”
ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களில், ஒரே இனத்தைச் சார்ந்தவர்களில் ஏன் சிலர் இரக்கம் மிக்கவர்களாக உள்ளனர். சிலர் கொடியவர்களாக, தீயவர்களாக இருக்கிறார்கள்?
இப்படி ஒன்றோடு இன்னொன்றை, ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டு நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இறைமகன் இயேசுவின் ஒரு கதையில் பதில் இருக்கலாம். தான் சொல்ல விரும்புவது மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக இயேசு பல சின்னஞ்சிறு நீதிக் கதைகளைச் சொன்னார். அவற்றை உருவகக் கதைகள் என்கின்றனர். ஆங்கிலத்தில் ‘பாரபில்ஸ்’ (PParables).
இது விதைப்பவனின் கதை. விதைகளை எல்லாத் திசைகளிலும் தூவி விதைத்துக்கொண்டே சென்றார் விவசாயி ஒருவர். சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறைப் பகுதிகளில் விழுந்தன. அவை விரைவில் முளைத்தன. ஆனால், ஆழமாய் வேரூன்ற முடியவில்லை. அவை வெயிலில் கருகிப் போயின. சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து இவற்றை முடக்கிவிட்டன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்கூட, ஒரே அளவில் பயன் தரவில்லை. சில 30 மடங்காகவும், சில 60 மடங்காகவும், சில 100 மடங்காகவும் விளைந்து பலன் தந்தன.
விதை என்பது இறைவார்த்தை. இறைவன் நமக்குச் சொல்ல விரும்பும் செய்தி. நிலம் நமது மனம். இந்தச் செய்தியை மறைநூல் அல்லது நல்லதொரு நூல் நம் மனத்தில் விதைக்கலாம். இறையடியார், அருட்பணியாளர்கள், காணொலி மூலம் நம்மோடு பேசும் நல்லவர்கள், பயணத்தின்போது நாம் சந்திக்கிற ஓர் அரிய மனிதர், நம்மை நன்கு அறிந்த ஒரு நல்ல நண்பர் என்று விதைப்பவர்கள் பல வகையினராக இருக்கலாம்.
மனித மனம் எனும் நிலத்தில் விழும் இறைவார்த்தை வளர்ந்து பலன் தராமல் தடுப்பவையும் பலவகைப்படலாம். தீய மனிதர்கள், செல்வ மாயை, கவலைகள், பயங்கள், நல்லவனாய் நேர்மையாளனாய் வாழ முயலும்போது ஏற்படும் இன்னல்கள், இடைஞ்சல்கள் என்று இவை ஆளுக்கு ஆள் மாறுபடலாம். இந்தத் தடைகள் யாவையும் வென்று நல்லோராய் வளர்பவர்களே இறைவனுக்கு மகிழ்ச்சி தருவோர், சமுதாயத்துக்குப் பயன் தருவோர் ஆவார்கள். எனவே, வளராமல் மடிந்துபோன விதைகளுக்கு விதைப்பவரைக் குறை சொல்லிப் பயனில்லை.
இயேசு சொன்ன இந்த விதைப்பவர் கதை சொல்லும் முக்கியமான உண்மை என்ன? எங்கிருந்து வந்தோம் என்பதை விட, எங்கு போய் விழுந்தோம் என்பதே முக்கியம். எங்கிருந்து புறப்பட்டோம் என்பதை விட, எங்கு போய்ச் சேர்ந்தோம் என்பதே முக்கியம். எனவே, அவ்வப்போது கண்களை அகல விரித்து, சுற்றும் முற்றும் பார்ப்பது அவசியம். எங்கிருக்கிறோம் இப்போது? நல்ல நிலத்தில்தானா? இல்லை பாதையிலா அல்லது பாறையிலா? நம்மைச் சுற்றியிருப்பவை நல்ல பயிர்கள் தானா? அல்லது முட்செடிகளா?
கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com