

பஞ்சபூதங்களில் ஒன்று காற்று. காற்றுக்கு உருவம் உண்டா? காற்றை உணரத்தானே முடியும். நம் கண்களால் காண முடியுமா?..
முடியும் என்கிறது நம் புராணங்கள்.
காற்றுக்கு உருவம் கொடுத்து, வாயு பகவான் என பெயர் சூட்டி அவரை அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக வரித்துள்ளது புராணங்கள். காற்று வேகமாக வீசும். அதுபோல் ஓடும் மிருகங்களில் மான், அதிவேகமாக ஓடும் திறன் கொண்டதால் அதுவே வாயு தேவனுக்கு வாகனமாக அளிக்கப்பட்டுள்ளது. வாயுதேவன், கையிலே கொடியை வைத்துள்ளார். காற்றின் அசைவைக் காட்டவே அது உதவுகிறது.
காற்று என்பது பூந்தென்றல் மட்டுமல்ல; கடும்புயலும் சேர்ந்தது தானே. இந்த உண்மையை உணர்த்த வளைந்த புருவமும், அச்சமூட்டும் பார்வையும், கோரைப் பற்களுமாக வடிவமைத்த சிற்பியின் கலைத்திறனும், அழகும் பொருந்தியுள்ளன. தலையில் உள்ள கிரீடமும் மார்பிலும் இடுப்பிலும் உள்ள அணிகலன்களும் அற்புதமாக உள்ளன. இது சோழர் காலத்திய சிலை என்பதை நினைவூட்டும் சிம்மம் எழிலுக்கு எழில் சேர்ப்பது.
இந்த வாயு பகவான் சிலை, ஆகாயத் தலமான சிதம்பரம் கீழ் கோபுரத்தின் வடமேற்கு பகுதியில் இருப்பது இன்னொரு பொருத்தம். மேலும் தர்மபுரி கல்யாண காமாக்ஷி அம்மன் கோயில் அர்த்த மண்டபத்தின் விதானத்தில் நடுவில் சிவபெருமானின் ஆனந்த நடனமும் சுற்றிலும் அஷ்ட திக்கு பாலகர்களும் தங்கள் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கிறனர். n ஓவியர் வேதா n