

ஓவியர் வேதா
இவரை வீரபத்திரர் என்று கூறுகின்றனர். வலது கரத்தில் நீண்ட வாளையும், இடது கரத்தில் மேலே தூக்கியபடி சதுர வடிவக் கேடயத்தையும் தாங்கியுள்ளார்.
தட்சன் உடல் மீது இடது காலைஅழுத்தி ஊன்றியபடி , வலதுகாலைத் தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். தன் பாதத்தின் அடியில் சிக்கித் தவிக்கும் தட்சன் தலையைத் தூக்கித் தப்பிக்க முயற்சிக்க, அவன் தலையைத் தன் நீண்ட வாளால் அழுத்தி அசைய முடியாதபடி செய்திருக்கும் கோலம் அற்புதம். தலை, ஒருபுறம் , உடல் ஒருபுறம், தூக்கிய திருவடி ஒருபுறம் எனத் திரும்பி, திரிபங்க நிலையில் இருக்கும் இச்சிலை பூரணத்துவத்தின் அம்சம்.
தலையில் ஜடாமுடிக்குப் பதில் வித்தியாசமான கிரீடம் உள்ளது. தாடியுடன் இணையாமல் குறுவாள் போன்ற மீசையும், நீண்ட தாடியும் அதன் அடி முனையில், நம் பெண்கள் தலைக்கு குளித்து விட்டு தலைமுடியின் அடியில் சிறு முடிச்சு போட்டுவார்களே, அதுபோல் முடிச்சு இருப்பதையும் சிற்பி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
பரந்த மார்பும், அங்க அசைவுகளில் தெரியும் எலும்புகளும், மார்பில் உள்ள அணிகலன்களும் வலது தோளிலிருந்து இடதுதோள் வரை ஆரம்பத்தில் குறுகியும், இடுப்பில் இருந்து பருத்தும் இடது தோளைத் தொடும் போது குறுகியும் ஒரு மாலை போன்ற அணிமணிகளின் அசைவுகளும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் உள்ளன. இடதுகால், தட்சனின் உடல்மீது நன்கு அழுத்தி நிற்கும்போது கால்களில் தெரியும் திரட்சியும், நரம்புகளின் அமைப்பும் அழகோ அழகு. இந்தக் காட்சியானது முயலகன் மீது காலை ஊன்றி நடனமாடும் இறைவனை நினைவுபடுத்துகிறது.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறன் (கூன் பாண்டியன்) என்ற பாண்டிய அரசனால் கட்டப்பட்ட நெல்லையப்பர் கோயில் இந்தச் சிலை உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் ‘திருநெல்வேலி பதிகம்’ பாடப் பெற்ற இந்த ஆலயத்தில் நாயக்க மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பம் இது.