அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி

அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி
Updated on
2 min read

தஞ்சாவூர்க்கவிராயர்

இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

தமிழனாக வாழ வேண்டும்

1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். அவரது தவத்தேடல் தமிழ்த்தேடலாக மலர்ந்தது.

லத்தீன் மொழியில் திருக்குறள்

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை லத்தீனில் மொழிபெயர்த்தது இவரது சாதனைகளில் முதன்மையானது. கொடுந்தமிழ் என்று அழைக்கப்பட்ட பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. தமிழ்-லத்தீன்-போர்ச்சுகீசிய-ஸ்பானிஷ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் பொது அகராதி படைத்தவர். கல்லூரி என்ற சொல்லாக்கம் இவரால் செய்யப்பட்டது என்பர். கி.பி. 1719 முதல் தனது இறுதிக்காலமான 1747-ம் ஆண்டுவரை வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் 36. அவர் தமிழகத்தில் வாழ்ந்த காலமும் 36 ஆண்டுகள்.

தமிழில் நெடில் எழுத்துக்களை உருவாக்கியவர் வீரமாமுனிவர் ஆவார். ‘ஆ’ என எழுத ‘அர’ என இரண்டு எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ: அர, எ: எர) இந்த நிலையை மாற்றி ‘ஆ, ஏ’ என மாறுதல் செய்தவர் இவர். அந்தப் புதிய எழுத்து முறைகளை தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டு இன்றளவும் புழக்கத்தில் இருக்கிறது.

மாதா அடைக்கல அன்னை ஆனார்

அடைக்கல அன்னையைப் பொன்நகை அணிந்து புன்னகைக்கும், ஒரு தமிழ்ப் பெண்ணாக வடிவமைத்து இவ்வடிவத்தையே சிலையாக வடித்து மணிலாவிலிருந்து வரவழைத்து, ஏலாக்குறிச்சியில் கோயில் எழுப்பினார் அடிகள். இத்தாலிய ஆலயக் கட்டுமான முறையில் எழிலோடு திகழ்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் மேல்மாடத்தில், வீரமா முனிவர் காலத்தில் ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பொருட் கள் உள்ளன. அவற்றின் வடிவமும் செய்நேர்த்தியும் ஆச்சரியமாக உள்ளன. பலமொழிப் புத்தகங்கள், அதிசயமான அச்சு நூல்கள் அங்கே கண்ணாடிப் பேழைகளில் அவர் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் கரைபுரண்டோடி, எங்கும் பசுமைத் தோட்டங் களாகவும் குளிர்ச்சியான மரநிழல் கூட்டங்களாகவும் ஏலாக்குறிச்சி திகழ்ந்தது. கவிதைகள் புனைய வீரமாமுனிவருக்கு ஏலாக்குறிச்சி ஏற்ற இடமாயிற்று. கொள்ளிடம் கரைபுரண்டு ஓடும் ஆறுமாதங்களும் தனது குடிலில் அமர்ந்து எழுதியபடி இருப்பார் அடிகள். அடிகள் சிலநேரம் அய்யம்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பாதை ஒன்று அய்யம்பேட்டை அருகில், வீரமாமுனிவர் வெட்டி என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது.

மன்னரின் நோய் தீர்த்தவர்

தஞ்சையில் சரபோஜி மன்னரின் நோயைத் தமது மூலிகை மருத்துவத்தால் குணப்படுத்தினார். அதுவரை கிறித்தவர்கள், போதகர்கள் ஆகியோர்மீது சரபோஜி மன்னர்கள் காட்டிய வெறுப்பு மறைந்தது. அடிகள் தமது மறைப்பணியை தஞ்சாவூரில் தடையின்றி மேற்கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார், ராஜபிளவை என்னும் தீராத நோயால் துன்புற்றார். ஆங்கில மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப்போயின.

வீரமாமுனிவர் மன்னரின் வேதனை கண்டு அடைக்கல மாதாவை வேண்டிப் பச்சிலை தேடிச் சென்றார். கடுங்கோடைக்காலம் அது. புல்லும் பொசுங்கிய கட்டாந்தரையில் பச்சிலை எப்படிக் கிடைக்கும்? ஓரிடத்தில் தண்ணீர் குபுகுபுவென்று கொப்பளித்து வந்தது. அந்த நீரோடு சேற்றை அள்ளி மன்னரின் ராஜபிளவையில் வைத்துப் பூசினார். அரசர் அன்றே குணமடைந்து நன்றாகத் தூங்கினார்.

இச்செய்தி கல்வெட்டில் பொறிக்கப் பட்டு, நோய் தீர்த்ததற்குக் காணிக்கை யாக அரசன், அடைக்கல அன்னையின் ஆலயத்துக்கு நிலம் அளித்த செய்தி ஆலயத்துக்குள் காட்சியளிக்கிறது.

வீரமாமுனிவர் மறைந்தபோது, ஏலாக் குறிச்சியைச் சேர்ந்த மக்களும் கண்ணீர் சிந்தினர். மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ பறந்துவிட்டது.

(தேடுதல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in