

“நெறி எது?” என்று துறவி ஒருவர் ஞானியிடம் கேட்டார். “பட்ட மரமொன்றில் டிராகன் முணுமுணுக்கிறது" என்று பதில் கிடைத்தது. துறவி அடுத்த கேள்வியைக் கேட்டார்.
“நெறியைப் பின்பற்றுபவனின் இயல்பு என்ன?”. கபாலத்தில் உள்ள விழிக்கோளங்கள் என்று ஞானி பதிலளித்தார். “பட்ட மரத்தில் டிராகனின் முணுமுணுப்புகள் எதைத் தெரிவிக்கின்றன?” என்று ஞானியிடம் கேட்கப்பட்டது. "இன்னும் மகிழ்ச்சி மிச்சமிருப்பதை" என்றார் ஞானி. கபாலத்தில் இருக்கும் விழிக்கோளங்களின் நிலை பற்றி அந்தத் துறவி கேட்டார். விழிக்கோளங்கள் இன்னும் பிரக்ஞையுடன் உள்ளன என்று ஞானி பதிலளித்தார்.
பட்டமரத்திலிருக்கும் டிராகனின் முணுமுணுப்பு எதைத் தெரிவிக்கிறது என்று துறவி கேட்டார். அந்தக் கேள்விக்கு, ரத்த ஓட்டம் இன்னும் துண்டிக்கப்படவில்லை என்றும் விழிக்கோளங்கள் இன்னும் உலரவில்லையென்றும் பதில் கிடைத்தது. டிராகனின் முணுமுணுப்பை யார் கேட்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
“இந்த முழு உலகத்திலும், கேட்க முடியாதவர் என்று ஒருவரும் இல்லை" என்று பதில் கிடைத்தது. டிராகனின் முணுமுணுப்புகள் பற்றி எந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டது என்று துறவி கேட்டார். “அது எந்தப் புத்தகத்தில் உள்ளது என்று தெரியாது. ஆனால், அதைக் கேட்டவர்கள் இறந்துவிடுகிறார்கள்.” என்றார்.
| பட்டமரத்தில் டிராகன் முணுமுணுக்கிறது அதன் நெறியும் அதற்குத் தெளிவாகப் புலப்படுகிறது கபாலத்தில் பிரக்ஞை இல்லாத போது மட்டுமே கண்கள் தெளிவாகின்றன. மகிழ்ச்சியும் பிரக்ஞையும் அந்தத்துக்கு வரும்போது அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வருகின்றன அப்படிப்பட்ட ஒன்று களங்கத்துக்கிடையே தூய்மையை எப்படிப் பிரித்தறிய முடியும். |