

உஷாதேவி
திருப்பதியில் ஒரு சிறுபகுதி குரவபுரம். அந்தக் குரவபுரத்தில் பீமன் எனும் குரவ நம்பி மண்பாண்டங்கள் செய்து பிழைத்து வந்தார். திருப்பதி ஏழுமலையான் மீது மாறாத அன்பும், பக்தியும் கொண்டு, தினமும் இறைவனுக்கு மண்பூவைச் சூட்டுவார். இவர் வாழ்ந்த காலத்திலே தொண்டைமான் சக்கரவர்த்தியும் வாழ்ந்தார்.
அவர் ஒவ்வொரு நாளும் மலையப்பனுக்குச் சொர்ணப் பூவைச் சமர்ப்பித்து வணங்குவார். மறுநாள் இறைவனைச் சேவிக்க வரும்போது, இறைவன் மீது ஒரு மண்பூவைப் பார்த்தார். தொண்டைமான் இறைவனை வழிபட்ட பின்னர், மண்பூவைச் சூட்டியது யார்? என அர்ச்சகரிடம் வினவினார்.
அர்ச்சகர் விவரம் தெரியாமல் குழம்பினார். யார் சூட்டிய மண் பூ இதுவென்று யோசித்துக்கொண்டேயிருந்த தொண்டைமானின் கனவில் வந்த பெருமாள், குரவ நம்பி செய்த அன்பு மலர் என்ற செய்தியைக் கூறி மறைந்தார்.
மறுநாள் தொண்டைமான் குரவபுரம் சென்று பீமனின் வீட்டை அடைந்து, அன்று மாலை வரை பீமனைக் கண்காணித்தவாறு மறைந்திருந்தார். தினமும் தன் தொழிலைப் பக்தியுடன் முடித்து கடைசியில் மண்பாண்டச் சக்கரத்தில் ஒட்டி இருந்த மண்ணைச் சேர்த்தெடுத்து பூவாகச் செய்து, தன் வீட்டிலிருந்த ஏழுமலையானின் திருவுருவப் படத்தின் மீது சூட்டினான்.
இதைப் பார்த்த சக்கரவர்த்தி, வெளியேவந்து குரவ நம்பியின் காலில் விழுந்து வணங்கினார். குரவ நம்பியோ தன் பக்தி அரசனுக்குத் தெரிந்துவிட்டதே என வருந்தினான். அச்சோ! இனி எல்லோரும் நம்மைக் கொண்டாடுவார்களே. அப்படிக் கொண்டாடினால் எனக்குக் கர்வம் வந்துவிடுமே எனச் சிந்தித்தவாறே கீழே விழுந்து தன் உயிரை விட்டுவிட்டான் குரவ நம்பி.
குரவ நம்பியைப் போல என் அன்பால் ஒரு சிறு மலரையும் இறைவனுக்குச் சூட்டவில்லையே சுவாமி என வருந்துகிறாள் நம் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com