சித்திரப் பேச்சு: ஆடல்வல்லானின் அபிநயக் கோலம்

சித்திரப் பேச்சு: ஆடல்வல்லானின் அபிநயக் கோலம்
Updated on
1 min read

ஓவியர் வேதா

வலக் காலைத் தூக்கியும், இடக் காலைச் சற்று வளைத்தும் முயலகன் மீது ஊன்றி நடனமாடும் கோலத்தில் இறைவன் காட்சிதரும் சிற்பம் இது. வலக் கரம், அபயஹஸ்தமாகவும், இடக் கரம் தலைக்குமேல் தூக்கிக் காட்டியபடியும் அமைந்துள்ளது.

வலது மேல்கரத்தில் உடுக்கையும், இடது மேல்கரத்தில் அக்கினியும் தாங்கப்பட்டுள்ளன. இடது கீழ்க் கரங்கள் இரண்டும் நடனத்துக்கேற்ப டமருகத்தை இசைத்தபடியுள்ளன; வலது கீழ்க் கரங்கள் இரண்டும் இசைக்கேற்ப தாளம் போடுகின்றன.

தலையைச் சற்றே சாய்த்து, இடுப்பை வளைத்து நடனமாடும் கோலத்தில் தனது நடனத்துக்கு ஏற்ப, தானே இசையும், தாளமும் போடும் விதத்தைச் சிற்பி எப்படித்தான் கற்பனை செய்தாரோ?

தலையில் ஜடாமகுடம், காதில் குண்டலம், மார்பிலும் இடுப்பிலும் மணியாரங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக, இடுப்பில் உள்ள ஆபரணங்களில் சிம்மத்தின் முகம் அழகு. சோழர்களுக்குச் சிம்மத்தின் மீது அப்படியென்ன காதலோ?

கர்ப்பக்கிரகத்தின் சுற்றுச் சுவர்களிலும், யானை மற்றும் காளை போன்ற விலங்குகளிலும் ஏதேனும் ஓரிடத்திலாவது சிம்மத்தின் உருவத்தைச் செதுக்கி இருப்பது ஊன்றிக் கவனித்தால் தெரியும். வலப்புறத்தில் பூதகணங்கள் மகிழ்ச்சியுடன் இசைக்கின்றன. இடப் புறம் தோல்வியுற்ற தேவி செய்வதறியாது திகைத்து நிற்கிறாள்.

மேலே தேவர்களும் கிம்புருடர்களும் நடனத்தை ரசிப்பதையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளார் சிற்பி. இந்த அற்புதமான நடனச் சிற்பம் பத்தாம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் எடுப்பித்த ஆடல்வல்லான் ஆலயமான சிதம்பரத்தில் உள்ளது. கீழ்க் கோபுரத்தின் வடக்கு பக்கக் கோஷ்டத்தில் அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in