

விவேகானந்தர் லண்டனில் தங்கியிருந்தபோது, தி இந்து ஆங்கில நாளிதழ் சார்பாக 1896-ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இந்தியா நவீன உலகத்துக்கு அளிக்க வேண்டிய செய்திகள் குறித்து இந்த நேர்காணலில் பேசுகிறார் விவேகானந்தர். இந்த நேர்காணலைச் செய்தவர் சி. எஸ். பி.
இன்றைய காலத்தில் இந்தியா உலகத்துக்கு அளிக்க வேண்டிய செய்தி என்ன?
உலகத்துக்கு இந்தியா ஆற்ற வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான். எல்லாக் காலங்களிலும் அரூபவாத அறிவியல், அப்பாலைத் தத்துவம், தர்க்கம் ஆகிய சிறப்புப் புலங்களின் வாயிலாக மனிதன் தன்னைப் பரிசீலிக்கும் ஆன்மிக வழிதான் இந்தியாவின் வழியாகும்.
நீங்கள் முதலில் இங்கிலாந்துக்கு வராமல் அமெரிக்காவுக்குப் போனதற்கான காரணம் என்ன?
சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்கும் காரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. மைசூரின் மன்னரும் இன்னும் சில நண்பர்களும் என்னை இந்து சமயப் பிரதிநிதியாக அங்கே அனுப்பினார்கள். அங்கே நான் மூன்று வருடங்கள் தங்கியிருந்தேன். சென்ற கோடையையும் இந்தக் கோடையையும் லண்டனில் தங்கிச் செலவழிக்கிறேன். அமெரிக்கர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் ஆங்கிலேயர்களைவிட முன்தீர்மானங்கள் குறைவான வர்களாகத் திகழ்கிறார்கள்.
ஒரு புதிய கருத்தைப் பரிசீலிக்கவும் ஆய்ந்து பார்க்கவும் மதிப்பிடவும் அவர்கள் திறந்த மனத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் விருந்தோம்பல் பண்பிலும் சிறந்தவர்கள். ஒருவர் தனது தகுதி, திறன்களை எடைபோடுவதற்கு அவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. பாஸ்டன், நியூ யார்க், பிலடெல்பியா, பால்டிமோர், வாஷிங்டன் எனப் பல நகரங்களுக்குச் சென்று நண்பர்களிடையே உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன்.
ஒவ்வொருவரிடத்திலும் நீங்கள் ஒரு சீடரை உருவாக்கிவிட்டீர்கள் அல்லவா?
ஆமாம். ஆனால், நான் அமைப்புகளை உருவாக்க வில்லை. அதற்காகவும் நான் இங்கே வரவில்லை. அமைப்புகளுக்கு அவற்றை நிர்வகிக்க மனிதர்கள் தேவை. அதிகாரம், பணம், செல்வாக்கு தேவை. அதற்காகத் தனது ஆதிக்கத்துக்காக அவை சண்டையில் கூட இறங்க வேண்டி வருகிறது.
உங்களது லட்சியத்தைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
சமயத்துக்குப் பின்னால் உள்ள தத்துவ சாரம், அதன் எல்லா வெளிவடிவங்களையும் தாண்டிய உண்மையானது. எல்லா மத வடிவங்களிலும் தேவையான பகுதியும் தேவையற்ற பகுதியும் உண்டு. அதன் வெளி ஓட்டைப் பிய்த்துப் பார்க்கும்போது தெரியும் உள்ளடக்கமே எல்லா சமயங்களின் அடிப்படையும் ஆகும். அங்கே தான் ஒருமையும் ஒற்றுமையும் இருக்கின்றன. கடவுள், அல்லா, பரிசுத்த ஆவி, நேசம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த ஒருமைதான் அனைத்து உயிர்களையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது.
உயிரின் மிக மிக சாமானிய வடிவம் தொடங்கி அது எடுக்கும் மகத்தான அவதாரமான மனிதன் வரை அதுதான். இந்த ஒருமையைத் தான் இந்தக் காலத்தில் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அந்த ஒருமைக்கு வெளியே இருக்கும் பல்வேறு வடிவங்கள் தேவையற்றவை. இந்த வெளி வடிவங்களுக்காகவே மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் மீதான நேசமும் மனிதன் மீதான நேசமுமே அவசியமானது. இதைப் பரப்புவது மட்டுமே என்னுடைய நோக்கம்.
| மேலும் அருமையான நேர்காணல்கள், செய்திக் கட்டுரைகள், அரிதான ஒளிப்படங்களுக்கு : THE MONK WHO TOOK INDIA TO THE WORLD இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications |
தமிழில்: ஷங்கர்