Published : 14 May 2020 10:14 am

Updated : 14 May 2020 10:14 am

 

Published : 14 May 2020 10:14 AM
Last Updated : 14 May 2020 10:14 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 118: தன்னை அறியாமல் தானே கெடுகிறான்

uyir-valarkum-thirumandhiram

கரு.ஆறுமுகத்தமிழன்

தேட வேண்டியது எதை? இன்பத்தை என்பார் சிலர்; இறைமையை என்பார் சிலர். எனில், இன்பத்தில் இறைமை இல்லையா? அல்லது இறைமையில்தான் இன்பம் இல்லையா? என்று நாம் குழம்புவோம். தெளிவும் தேர்ச்சியும் இல்லாததே குழப்பத்துக்குக் காரணம். தெளிவும் தேர்ச்சியும் உள்ள அறிவைத் தேடி அடைந்துவிட்டால், அறிய வேண்டியது எதை? அடைய வேண்டியது எதை? எதில் எது இருக்கிறது அல்லது இல்லை என்பதில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டுவிடுகிறது. எனவே, அறிவைத் தேடுதல் முன்னிலைப்படுகிறது.

தேடி அடைந்த அறிவு, தெளிவும் தேர்ச்சியும் ஏற்புடைமையும் உள்ள அறிவுதானா என்று ஆராய்ந்தும் அளந்தும் பார்க்க வேண்டாமா? இதென்ன கொடுமை? அறிவைக்கொண்டே எல்லாவற்றையும் ஆராய்கிறோம், அளக்கிறோம்; அப்பேர்ப்பட்ட அறிவையே அளப்பதா? இப்படி அளந்துகொண்டே போனால் அது எங்கே போய் முடியும்? என்று கேட்கலாம். கேட்போர்க்கு ஒன்று: பொருள்கள் வாங்கும்போது அளந்தே வாங்குகிறோம்.

வாங்கப்படும் பொருளை அளக்கப் பயன்படும் அளவுக் கருவிகள் சரியான அளவில் இல்லை என்றால், வாங்கும் பொருளின் அளவு தடுமாறிப் போகிறது இல்லையா? பூ வாங்குகிறபோது முழ அளவு ஒழுங்காக நீட்டப்படுகிறதா என்றும், மண்ணெண்ணெய் வாங்கும்போது எண்ணெய்யை முகக்கும் குவளை சரியான அளவுடையதா என்றும், கத்தரிக்காய் வாங்கும்போது எடை அளவு முறையானதா என்றும் சரிபார்ப்பதில்லையா? வாங்கும் பொருளின் அளவு பழுதுபட்டுவிடக் கூடாது என்பதற்காக அளவுக் கருவிகளைச் சரி பார்ப்பது முறை என்றால், கொள்ளும் அறிவின் அளவு பழுதுபட்டுவிடக் கூடாது என்பதற்காக அறிவுக் கருவியைச் சரி பார்ப்பதும் முறைதானே? அறிவை ஆராயும் இயலுக்கு அறிவு ஆராய்ச்சி இயல் அல்லது அறிவு அளவியல் என்று பெயர்.

அறிவது எது

அறிவது எது? அறியப்படுவது எது? அறியும் வழி எது? என்னும் கேள்விகளை முன்னிட்டு, அறிவு அளவியலுக்குப் புள்ளி வைத்துக் கோலம் போடுகிறார் திருமூலர்:

தன்னை அறியத் தனக்குஒரு கேடுஇல்லை;

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே.

(திருமந்திரம் 2355)

பொருள்களின் இயல்பை அறிந்துகொள்ள விரும்புகிற ஒருவர், முதலில் தன்னுடைய இயல்பை உணர்ந்துகொள்ள வேண்டும். தன்னை அறிந்தவனுடைய அறிவு பொய்யாகாது; நிலை மாறாது; திரியாது; கெட்டு உலையாது. சுடப்படாத பச்சை மண் கலத்தில் நீர் ஊற்றி வைத்தால் நிற்குமா? கலத்தைக் கரைத்துத் தானும் வார்ந்தோடிப் போகும் இல்லையா? அதைப் போலவே, தன்னை அறியாதவன் எதை அறிந்தாலும் பயனில்லை. கெட்டி தட்டாத அவன் அறிவில் எதுவும் உறைத்து நிற்காது. தன்னை அறிதல், தன்னை அறியும் அறிவை அறிதல், இவை நிகழ்ந்துவிட்டால் வெளியில் அறிவதற்கு என்ன இருக்கிறது? புறத்திலே போய்ப் போற்ற விரும்புகிறவன் தன்னையே போற்றித் தன்னிலேயே இருந்துகொள்ள மாட்டானா? உயிர் என்பதும் இறை என்பதும் அறிவு வடிவமே அல்லவா?

அறிவு வடிவுஎன்று அறியாத என்னை

அறிவு வடிவுஎன்று அருள்செய்தான் நந்தி;

அறிவு வடிவுஎன்று அருளால் அறிந்தே

அறிவு வடிவுஎன்று அறிந்துஇருந் தேனே. (திருமந்திரம் 2357)

சைவசித்தாந்த முதல்வர் மெய்கண்டார் வாழ்வில் ஒரு செய்தி. மெய்கண்டாரின் குலத்துக்கே குருவாகிய சகலாகம பண்டிதர், சிறுவனாகிய மெய்கண்டான் மெய்யறிஞனாக இருப்பதைப் பொறுக்காமல், மெய்கண்டானின் அறிவைச் சோதிக்க, ‘ஆணவத்தின் (அறியாமையின்) வடிவம் எது?’ என்று கேட்டாராம். அதற்குப் பதில் சொல்லாமல், ‘நீங்களே’ என்று சுட்டிக்காட்டினாராம் மெய்கண்டார். பிறகு குருவாகிய சகலாகம பண்டிதர், மெய்கண்டாருக்குச் சீடனாகி அருள்நந்தி சிவம் ஆனது தனி. அருள்நந்தியின் குருவாகிய மெய்கண்டார் ‘அறியாமையின் வடிவம் நீ’ என்று சுட்டிக்காட்டியிருக்க, திருமூலரின் குருவாகிய நந்தியோ, ‘அறிவு வடிவம் நீ’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரே காசின் இரண்டு பக்கங்களைச் சுட்டியிருக்கிறார்கள் இருவரும்.

அறிவு வடிவு எது என்று அறியாமல் மயங்கி இருந்தேன். அது நானே என்று எனக்கு அருளப்பட்டது. என்னை உணர்ந்து என்னிலே இருந்தேன். அறிவது உயிர்; அறியப்படுவதும் உயிர்; அறியும் வழி அருள். அறிவே அறிவை அறியும்; அறிவிக்கும்.

(அறிவது தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உயிர் வளர்க்கும் திருமந்திரம்அறிவதுதிருமந்திரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author