ஜென் துளிகள்: மனத்தில் சுமக்கும் கல்

ஜென் துளிகள்: மனத்தில் சுமக்கும் கல்
Updated on
1 min read

ஹோகன் என்ற ஜென் குரு, கிராமப்புறத்திலுள்ள சிறிய ஆலயத்தில் வசித்துவந்தார். ஒரு நாள், நான்கு துறவிகள் பயணவழியில் அங்கே தங்குவதற்காக அந்த ஆலயத்துக்கு வந்தனர். அவர்கள் குளிர்காய்வதற்காக முற்றத்தில் நெருப்புமூட்டிக் கொள்வதற்கு அனுமதிகேட்டனர். நெருப்புமூட்டிக்கொண்டிருந்தபோது அவர்கள் அகவய, புறவயப் பண்புகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பது ஹோகன் காதில் விழுந்தது.

அவர்கள் விவாதத்தில் இணைந்துகொண்ட அவர், “ஒரு பெரிய கல் உள்ளது. அது உங்கள் மனத்துக்குள் இருப்பதாக நினைப்பீர்களா, வெளியில் இருப்பதாக நினைப்பீர்களா?” என்று கேட்டார். “பௌத்த பார்வையில், எல்லாமே மனத்தின் புறவயப்பாடுதான். அதனால் கல் என் மனத்துக்குள் இருப்பதாகத்தான் சொல்வேன்” என்று ஒரு துறவி பதிலளித்தார். “அவ்வளவு பெரிய கல்லை நீங்கள் மனத்துக்குள் சுமந்துகொண்டிருந்தால், உங்கள் தலை மிகவும் கனக்கும்” என்று சொன்னார் ஹோகன்.

தேநீர் தரும் மகிழ்ச்சி

ஜப்பானில் வயோதிகர்கள் ஒரு ஊரில் குழு ஒன்றை அமைத்தனர். செய்திகளைப் பகிர்ந்துகொள்வதும், தேநீர் அருந்துவதும் அவர்களின் நோக்கமாக இருந்தது. விலையுயர்ந்த தேநீர் வகையைத் தேடிக்கண்டறிந்து, புதிய தேநீர்க் கலவைகளை உருவாக்கிச் சுவைப்பது அவர்களின் பழக்கமாக இருந்தது. அப்போது, அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுக்கும் முறை, அந்தக் குழுவிலேயே வயதில் முதிர்ந்த ஒருவருக்கு வந்தது. அவர் தனது இல்லத்துக்கு வந்தவர்களைச் சிறந்த முறையில் கோலாகலமாக வரவேற்றார். பொன்னால் ஆன கொள்கலனில் தேநீர் இலைகளைச் சரியான விதத்தில் வெந்நீரில் தூவி சரியான பதத்தில் தேநீரைப் பரிமாறினார்.

அனைவரும் முதியவர் வழங்கிய தேநீரை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தச் சுவையான தேநீர்க் கலவையை அவர் எப்படி உருவாக்கினார் என்று அனைவரும் அவரிடம் கேட்டனர். முதியவர் அதற்குப் புன்னகைத்தபடி, “பெரியோர்களே, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அருந்திய இந்தத் தேநீர், என் வயலில் பணியாற்றும் விவசாயிகள் அன்றாடம் அருந்துவது. வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த, நேர்த்தியான விஷயங்கள் எவையும் விலையுயர்ந்தவையோ, அல்லது கண்டுபிடிக்க முடியாததவையோ அல்ல” என்று பதிலளித்தார் அந்த முதியவர்

- கனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in