

டி. எஸ். எஸ்
திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷ குகையில் 1899 முதல் 1916 வரை ரமண மகரிஷி தங்கியிருந்தபோது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவம் இது. ஒரு நாள் குகையில் அமர்ந்திருந்தபோது, சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சீடரான ஒரு துறவி ரமணரைப் பார்க்க வந்திருந்தார். ரமண மகரிஷி முறையாக சன்னியாசம் பெறவேண்டுமென்று அவரைச் சம்மதிக்க வைக்க முயன்றார்.
இளம் சுவாமியான ரமணர், வெள்ளைக் கௌபீனம் அணிவதை விடுத்து காவி உடை அணியவேண்டுமென்று சாஸ்திரங்களை உதாரணம் காட்டி வாதாடவும் செய்தார்.
ரமணர், பிராமணர் என்பதால் சாஸ்திரங்களில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ அதன்படியான நியமங்களைப் பின்பற்ற வேண்டு மென்றார் அந்தத் துறவி. ரமணர் சம்மதித்தால், சன்னியாசத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் அனைத்தையும் தானே செய்துதருவதாகவும் வாக்களித்தார்.
அவர் சொன்ன அனைத் தையும் கேட்டுவிட்டு, இல்லையென்று ரமணர் மறுத்தார். சிருங்கேரியிலிருந்து வந்த துறவியோ மனம் தளரவில்லை. இளம் ரமணருக்கு அவர் கடைசியாக ஒரு நிபந்தனை விதித்தார். தான் ஊருக்குள் சென்று ஒருமணி நேரத்தில் திரும்பி வருவேன் என்றும் அதற்குள் ரமணர் சன்னியாசத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றும் கூறிச் சென்றார்.
சிருங்கேரியைச் சேர்ந்த சாது ஊருக்குள் சென்றதும், ரமணர் மீண்டும் தனியாக இருந்தார். அப்போது அந்த இடத்துக்கு வந்த பட்டிக்காட்டான் ஒருவர், புத்தகங்கள் அடங்கிய மூட்டை ஒன்றை ரமணர் முன் வைத்துவிட்டு, ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருவதாகவும் புத்தக மூட்டையைப் பார்த்துக்கொள்ளுமாறும் சொல்லிவிட்டுப் போனார். பட்டிக்காட்டான், சிருங்கேரி சாது இருவருமே சொன்ன நேரத்துக்குத் திரும்பவில்லை. இளம் ரமணர் மூட்டையிலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அதில் கிடைத்த ஒரு புத்தகம் அருணாசல மகாத்மியம். அந்தப் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டி ஒரு சுலோகத்தைப் படித்தார்.
தான் படித்த சுலோகத்தை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டார். பின்னர், கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.
ரமணர் கண்களைத் திறந்து பார்த்தபோது புத்தக மூட்டையைக் காணவில்லை. அந்தக் கிராமத்தான் எங்கே போனார் என்றும் தெரியவில்லை.
தன் வேலையை முடித்துக்கொண்டு சிருங்கேரி சாது, ரமணரிடம் திரும்பினார். தான் எழுதிவைத்த சுலோகத்தை ரமணர் அவரிடம் காண்பித்தார்.
“புனிதமான அருணாசல குன்றிலிருந்து மூன்று யோஜனை தூரத்துக்குள் (முப்பது மைல்) வாழும் யாருக்கும் தீட்சை தேவையில்லை. இருப்பினும், அவர்கள் மோட்சத்தை அடைவார்கள்.” என்பதுதான் அந்த சுலோகத்தின் பொருள்.
சாது, சிருங்கேரிக்குத் திரும்பி மடத்திலிருந்த சங்கராச்சாரியாரிடம் இந்தச் சம்பவத்தைச் சொன்னார். சங்கராச்சாரியார் அதைக் கேட்டுவிட்டு, ரமண மகரிஷி ஒரு ‘அத்யாச்ரமி' என்றார். அவர் எல்லா ஆஸ்ரமங்களையும் கடந்தவர் என்றும் அவருக்கு எந்த விதிகளும் பொருந்தாது என்றும் கூறினார்.
- தமிழில் : ஷங்கர்