

தஞ்சாவூர்க்கவிராயர்
சடாமுடியும் கமண்டலமும் கையுமாகக் காட்சியளிக்கும் தவமுனிகளும் மந்திரிகளாக மன்னர்கள் காலத்தில் பதவி களை நம் தேசத்தில் வகித்துள்ளனர்.
ஆன்மிக வல்லமையுடன் ஆட்சி யாளராகவும் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர். இவரது பூர்விகம் கர்நாடகம் என்பதும் ஒரு குக்கிராமத்தில் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதுமே இவரது பிறப்பைப் பற்றிக் கிடைக்கும் தகவல்கள்.
1515 முதல் 1634 வரை 119 வருடகாலம் வாழ்ந்திருக்கிறார். அப்பா, பிள்ளை, பேரன் என்று மூன்று நாயக்க மன்னர்களிடம் அமைச்சராகப் பணிபுரிந்திருக்கிறார்.
கும்பகோணத்தின் அருகில் உள்ள பட்டீஸ்வரமே இவரது ஆன்மிகத் தேடலின் தவமையம். மிகச் சிறுவயதிலேயே கலைகள் யாவும் கற்று சகலகலாவல்லவராகவும் வேத விற்பன்னராகவும் விளங்கி யிருக்கிறார். இவரது புலமை அச்சுத தேவராயர் காதுகளுக்கு எட்டிற்று.
அச்சுத தேவராயரின் அரசவையில் தலைமைப் பண்டிதராக நியமனம் பெற்றபோது இவருக்கு வயது பதினேழு. புலமையிலும் மதியூகத்திலும் சிறந்து விளங்கிய கோவிந்த தீட்சிதரின் அறிவுரைப்படி ஆட்சி நடந்தது.
மாடுமேய்ப்பவரை மன்னன் ஆக்கினார்
கோவிந்த தீட்சிதரின் தினசரி வழிபாட்டுக்குத் தேவைப்பட்ட பசும்பாலை அவரிடம் மாடு மேய்ப்பவனாக வேலைபார்த்த சேவப்பன் என்ற இளைஞன் கொண்டு வந்து தருவது வழக்கம். ஒருநாள் மேய்ச்சலில் இருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு சேவப்பன் திரும்பவில்லை. தீட்சிதர் அவனைத் தேடிச்சென்றார். அங்கே ஒரு மரத்தடியில் சேவப்பன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பெங்கும் மாலைச் சூரிய வெளிச்சம்பட்டு முழு உடலும் பொன்னாக மின்னியது.
அதைவிடவும் அவன் படுத்திருந்த கோலம் பிரமிக்க வைத்தது. நாடாளும் மன்னனின் கம்பீரத்துடன் தலைக்கு கைவைத்து சாய்ந்த கோலத்தில் படுத்திருந்த சேவப்பன் நாட்டையே ஆளப்பிறந்தவன் என்று அவர் உள் உணர்வு கூறியது. அவன் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து மன்னனிடம் சேர்ப்பிக்குமாறு கூறினார் கோவிந்த தீட்சிதர். இவனை என் உடன் பிறந்தோனாய்க் கருதி உரிய பணி தருக என்று அதில் கண்டிருந்தது. சேவப்பனைத் தனது அந்தரங்க உதவியாளராக நியமித்தார் அச்சுத தேவராயர்.
ஒரு முறை மன்னர் ஏராளமான புள்ளி விவரங்களைக் கொண்ட முக்கியமான மடல் ஒன்றை வாய்விட்டு வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வோலை தவறுதலாகத் தண்ணீரில் விழுந்து எழுத்துக்கள் கரைந்து போய்விட்டன. மன்னர் கவலையில் மூழ்கினார். சேவப்பன் மன்னரை அணுகி ஓலையில் அவர் வாசித்த விஷயங்களைக் கடகட வென்று அப்படியே ஒப்பித்தான். சேவப்பன், கோவிந்த தீட்சிதரின் குருகுலத்தில் தீட்சிதருக்குத் தெரியாமலே கற்றுத் தேர்ந்திருந்தான். ஒருமுறை கேட்டாலே எதையும் மனனம் செய்யும் ஆற்றல் அவனுக்கு இருந்தது.
சேவப்பனுக்கு என்ன வெகுமதி கொடுக்கலாம்? என்று கோவிந்தப்ப தீட்சிதரிடம் மன்னன் கேட்டான்.
தங்கள் மைத்துனிமூர்த்தி மாம்பாளைத் திருமணம் செய்து கொடுத்து வரதட்சணையாக ஒரு ராஜ்ஜியத்தையே கொடுக்கலாம் என்றார் தீட்சிதர்.
மதுரை, தென்னாற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு, சித்தூர் பகுதிகளை உள்ளடக்கி தஞ்சையைத் தலைநகராக்கி, தன் மைத்துனியைத் திருமணம் செய்வித்து சேவிப்பனுக்கு மன்னராக முடிசூட்டினார் அச்சுதப்ப நாயக்கர். சேவப்ப நாயக்கரின் ஆட்சியில் தஞ்சை ஆன்மிகத்திலும், கலைகளிலும், மக்கள் நலத்திலும் உச்சதைத் தொட்டது.
கோவில் திருப்பணிகள்
கோவிந்த தீட்சிதர் அமைச்சராகப் பணிபுரிந்து செய்த பணிகள் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. திருவண்ணா மலையில் உள்ள பிரம்மாண்டமான குளமும், மிகப் பெரிய கோபுரமும் இவர் கட்டியதுதான். இன்றளவும் ஐயன் குளம் ஐயன் கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டன. கும்பகோணம் மகாமகக் குளத்தில் 16 பக்கமும் கோபுரங்கள் எடுப்பித்ததும் இவர்தான்.
திருவையாற்றிலிருந்து மயிலாடுதுறைவரை காவிரிக் கரைப் படித்துறைகள் யாவும் இவர் கட்டியவைதாம். தஞ்சை மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க சேவப்பன் ஏரியை உருவாக்கினார். இப்போது சேப்பனாவாரி என்று அழைக்கப்படும் பகுதி இது. தொண்டை மண்டலம் முழுவதும் கணக்கற்ற ஏரிகளும் குளங்களும் இவர் கட்டியவைதாம்.
இவரது காலத்தில் காடுகளைத் திருத்தி ஊர்கள் உருவாக்கப்பட்டன. கோவிந்தபுரம், அய்யம்பேட்டை போன்ற ஊர்கள் அவர் உருவாக்கியவைதாம். தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற வணிகவீதி, ஐயன்கடைத்தெரு அவர் பெயரிலேயே இன்றளவும் அழைக்கப்படுகிறது. ஐயன் குளம், ஐயன் தெரு என அவர் பெயரையே மக்கள் சூட்டினர்.
எழுத்தறிவிக்கும் பள்ளிகளை ஊருக்கு ஊர் கட்டிய பெருமை இவருக்கு உண்டு. இவர் செய்த யாகங்களின் நினைவாக, கும்பகோணத்தில் யாகசாலைத்தெரு இன்றும் உள்ளது.
கோவிந்தய்யா என்ற பெயரில் அக்காலத்தில் அரசு இவர் வாழும் போதே நாணயம் வெளியிடப்பட்டது.
கர்நாடகத்தில் பிறந்து குடந்தையிலே வாழ்ந்து தஞ்சை மக்களுக்கு அரும்பணி ஆற்றிய இக்கருணையாளரைக் காவிரிக்கு ஒப்பிடல் தகும். மூன்று நாயக்க மன்னர்களின் அரசவையில் கோலோச்சிய கோவிந்த தீட்சிதர் தமது 119-ம் வயதில் பட்டீஸ்வரத்தில் மங்களாம்பிகை சன்னிதியில் சமாதியில் ஆழ்ந்து உடலை உகுத்தார்.
இவரும் இவர் மனைவி நாகாம்பாளும் வணங்கி நிற்கும் தனிசன்னிதி இக்கோவிலில் உள்ளது. மகாபெரியவர் என்றழைக்கப்படும் காஞ்சி முனிவர், கோவிந்த தீட்சிதரின் பெண் வயிற்று வம்சத்தில் பிறந்தவர்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com