

ரமலான் மாதம், இறைத்தூதர் அண்ணல் நபிகள் மூலமாக குரான் வெளியிடப்பட்ட காலமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் மற்றெந்த நாட்களைவிடவும் கூடுதலாக குரானோடு பிணைக்கப்பட்டிருக்கின்றனர். தினசரி குரானின் வசனங்களைப் படிப்பதன் வழியாக, புனித நூலில் சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகளை ஆழ்ந்து தங்கள் மனத்தில் பிரதிபலிக்கும் நாட்கள் இவை.
கரோனா பெருந்தொற்று காரணமாக சமூக இடைவெளி பேணும் காலத்தில், இஸ்லாமியர்களுக்கு இந்த ரமலான் சமயத்தில் குரானுடனும் அல்லாவுடனும் கூடுதலாக இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்ணல் நபிகள் சொன்ன பிரதான நெறிமுறையும் அதுதான். அவர் தனித்து மலைக்குகை ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டபோதுதான் குரான் அவருக்கு வெளிப்பட்டது. பரிசீலனை, பிரதிபலிப்பு, வழிபாடு, கடவுளுடனான இணைப்புக்கான நாட்கள் இவை. அவர்தான் ஆன்மிக ரீதியாகத் தனிமைப்படுத்திக்கொள்ளும் நோன்பை ‘இதிஃகாஃப்’ ஆக அறிமுகப்படுத்தினார்.
முகம்மது நபியின் காலத்தில், மூன்று நாட்கள் மக்கள் சேர்ந்து நடத்தும் இரவு தொழுகைக்குப் பின்னர் நான்காவது நாளிலிருந்து வீட்டிலிருந்தே தாராவிஹ்-ஐச் செய்யத் தொடங்கினார். சிறந்த தொழுகை என்பது விதிவிலக்காகச் செய்யப்படும் கூட்டுத்தொழுகையைத் தவிர தனியாகச் செய்வதே என்று நபிகள் கூறியுள்ளார்.
ரமலான் மாதத்தின் உண்மையான லட்சியங்களாக சுய ஒழுக்கம், சுய பரிசீலனை, சுயத்தை அறிவது, சுய முன்னேற்றம் ஆகியவற்றையே நினைக்கிறேன். தனியாக இருந்து பிரார்த்தனையிலும் சுய பரிசீலனையிலும் ஈடுபட்டு கடவுளுடன் இணைவதற்கு நமக்குத் தரப்பட்டிருக்கும் நாட்கள் இவை. மனித குலம் மேற்கொள்ளும் பயணத்திலும் மனித குலம் பெறப்போகும் வளர்ச்சியிலும் இந்த ரமலான் நோன்பு நாட்களில் பிரார்த்தனை செய்வதன் வழியாகப் பங்கேற்போம். n எம். எச். ராஜா முகம்மது n