

ஜென் மடாலயங்களுக்கான வழிகாட்டுதல்களை ஜென் குரு ஒருவர் வகுத்தார்: “ஜென் பாடங்களுக்கு மூன்று விஷயங்கள் அத்தியாவசியமானவை. ஒன்று, நம்பிக்கை என்னும் சிறந்த வேர். இரண்டு, வியப்பு என்னும் சிறந்த உணர்வு. மூன்று, உறுதி. இவை மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும், நீங்கள் முக்காலியில் ஒரு கால் இல்லாத நிலையைப் பெறுவீர்கள்.
இங்கே, எந்தச் சிறப்பு நிபந்தனையும் இல்லை. அனைவரிடமும் உணரும்படியிருக்கும் அடிப்படையான இயல்பை நீங்கள் அடையாளம் காண வேண்டும்; அனைவரிடமும் ஊடுருவிப் பார்க்கக்கூடிய அடிப்படையான உண்மை உள்ளது; இவற்றைக் கண்டறியும்போதுதான் உங்களால் உறுதியுடன் தொடர முடியும். எவற்றைப் பார்த்து வியப்படைய வேண்டுமென்பதற்கும் மேற்கோள்கள் இருக்கின்றன. பாதி விழிப்புடனும், பாதி ஞான நிலையிலும் ஒருவர் சென்றால், அவரால் ஜென்னில் வெற்றியடைய முடியாது. ஜென்னைப் பொறுத்தவரை, முழுமையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
ஞானமடையும் புற்கள், மரங்கள்
காமகுரா காலத்தின்போது, ஜப்பானின் டென்டாய் பள்ளியில் ஷிங்கன் ஆறு ஆண்டுகள் படித்தார். அதற்குப் பிறகு, ஜென் கல்வியை ஏழு ஆண்டுகள் படித்தார். பிறகு, சீனா சென்று மேலும் பதிமூன்று ஆண்டுகள் ஜென் கல்வியைப் படித்தார். அவர் மீண்டும் ஜப்பானுக்குத் திரும்பியபோது, அவரைப் பலரும் பேட்டி எடுக்க விரும்பினார்கள். அவரிடம் பல தெளிவற்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவரைத் தேடி வருபவர்களை அவர் வரவேற்றாலும், அவர்களின் எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
ஒரு முறை, ஞானத்தைப் பற்றிப் படித்திருந்த ஐம்பது வயது மாணவர் ஷிங்கனிடம், “நான் சிறுவயதிலிருந்தே டென்டாய் பள்ளியில் படித்துவருகிறேன். ஆனால், என்னால் ஒரு விஷயம் புரிந்துகொள்ள முடியவில்லை. புற்களும், மரங்களும்கூட ஞானமடையும் என்று டென்டாய் விளக்குகிறது. இது எனக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
“புற்களும் மரங்களும் எப்படி ஞானமடைகின்றன என்பதை விவாதிப்பதில் என்ன பயன்?” என்று கேட்டார் ஷிங்கன். “நீங்கள் எப்படி ஞானமடைகிறீகள் என்பதுதான் கேள்வி. அதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” என்றார் ஷிங்கன். “நான் ஒருநாளும் அப்படி யோசிக்கவில்லை,” என்று ஆச்சரியத்துடன் பதிலளித்தார் அந்த மனிதர். “அப்படியென்றால், நீங்கள் அதைப் பற்றி யோசியுங்கள்,” என்று கூறி அவரை வழியனுப்பிவைத்தார் ஷிங்கன்.
- கனி