

உஷாதேவி
கொங்கில் பிராட்டியும் அவளுடைய கணவன் கொங்கிலாச்சானும் கர்நாடக மாநிலத்தில் கொல்லேகாலில் வாழ்ந்தனர். அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்து பஞ்சம்பிழைக்க ரங்கம் வந்தனர். “எங்கும் திரிந்து இரங்கம் வந்து சேர்” என்பது பழமொழி. அதுபோல் ரங்கம் வந்து வாழ்ந்த சமயம் ராமானுஜர் அரங்கன் கோயில் பணிகளையும் திருத்திப் பணிகொண்டு வாழ்ந்து வந்தார்.
ஸ்ரீரங்கத்தின் உடைமைகளுக்கு உடையவர் இவரே என்பதால் உடையவர் என்று திருநாமம் இருந்தது. அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் என்றும், காஞ்சிபுரத்தில் இராமானுசர் என்றும், திருப்பதியில் பாஷ்யகாரர் என்றும் அழைக்கப்பட்ட ராமானுஜர் திருவரங்கத்தில் பிச்சை எடுக்க வேண்டி வீதிகளில் சென்றார்.
அப்பொழுது கொங்கில் பிராட்டி ராமானுஜரை வீழ்ந்து வணங்கி தனக்கு உபதேசிக்கும்படி வேண்டினாள். அவரும் ஓம் நமோ நாராயண நாமம் கூறி ஆசி வழங்கினார். பிறகு சில காலம் சென்றதும் கொங்கில் பிராட்டியின் சொந்த ஊரில் மழை பெய்து வளம் பெற்றது. அவள் மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் முன் ராமானுஜர் அவளுக்கு உபதேசித்த மந்திரத்தை மறந்துவிட்டாள். மீண்டும் அவரை ஸ்ரீரங்கத்தின் மடத்தில் சென்று சந்தித்துத் தன் மறதியைக் கூறி வருந்தினாள். ராமானுஜரும் அவளுக்குத் திரும்ப மந்திர உபதேசம் பண்ணினார். அவள் மந்திரம் பெற்றுக் கொண்டதுடன் ராமானுஜரின் அடிகளைத் (பாதுகைகளை) தருமாறு வேண்டினாள்.
அவள் விரும்பியபடி தன் காலடிகளையும் கொடுத்தார். அன்றிலிருந்து பாதுகை அணிவதை நிறுத்திவிட்டார். அதைப் பெற்ற கொங்கில் பிராட்டி தான் ஊர் திரும்பியதிலிருந்து அவள் சாப்பிடும் அன்னத்தை இராமானுசரின் பாதுகைக்கு சமர்ப்பித்து வழிபட்டு பின்பு அருந்தினாள்.
மீண்டும் எப்போது இராமானுசரைச் சந்திப்போமோ என மனவருத்தத்துடனும் ஏக்கத்துடனும் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீரங்கத்தில் கிருமி கண்ட சோழனின் துன்புறுத்தலால் தன் சீடர்களுடன் கொங்கு நாட்டுக்கு வந்தார் இராமானுசர்.
அப்பொழுது கொங்கில் பிராட்டியின் இல்லத்தில் உணவருந்தி இவளுக்குக் காட்சி கொடுத்தார். உண்மையான அன்பும் பக்தியும் கொண்டு வழிபடுவோருக்கு இறைவன் காட்சி கொடுப்பார் என்பது இவளின் வாழ்வில் நடந்த ஒரு உண்மையான நிகழ்வு. இன்றும் எண் 55, மங்கம்மா நகர், ஸ்ரீரங்கம் எனும் முகவரியில் கொங்கில் ஆச்சான் மாளிகை உள்ளது. அங்கு இவர்களின் வம்சத்தார் இராமானுசரின் பாதுகையைப் பாதுகாத்து வருகின்றனர்.
இராமானுசரின் பாதுகை (அடி) பெற்று வழிபட்ட கொங்கில் பிராட்டியைப் போல, நான் சிறப்புறவில்லையே என வருத்தமடைகிறாள். நம் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com