

தஞ்சாவூர்க்கவிராயர்
தனக்கு உள்ளே கடவுள் இருப்பதை மரணத் தருவாயிலும் மனிதன் அறிந்துகொள்வது இயலாது. ஏனெனில், அவன் மனத்தில் அப்போது வலியும் துயரமும் நிறைவேறாத ஆசைகளும் நிரம்பி இருக்கின்றன. கஸ்தூரி மான் போல் அவனுக்கு உள்ளும் கடவுள் இருக்கிறார். ஆனால், அவரை வெளியே தேடி அலைகிறான். கானகத்திலும், வானிலும் எங்கோ தூரத்தில் இருப்பதாகவும் தேடி அலைகிறான். மனத்துக்குள் அமைதியாகச் சலனமின்றி வீற்றிருக்கும் தெய்விகத்தை அவன் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.
கூட்டமும் தனிமையும்
தனிமையில் இருக்குமாறு விடப்பட்டால் மனிதர்களில் பலர் வருத்தமடைகிறார்கள். உலகம் முழுவதும் இன்று தனிமையில் வாழுமாறு மனிதர்களுக்கு நிர்ப்பந்தம் நேரிட்டிருக்கிறது. கூட்டத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்குத் தனிமை கடும் தண்டனை ஆகிவிடுகிறது.
கூட்டத்தில் விடப்பட்டால் வேறு சிலர் பதற்றமடைந்து தவிக்கிறார்கள். வாகனச் சத்தமும் மனிதர்களின் கூச்சலும் பேச்சும் அவர்களால் தாங்க முடியாதவையாக இருக்கின்றன.
அபூர்வ மனிதர்கள் வேறுசிலர் இருக்கிறார்கள். கூட்டத்தில் இருந்தாலும் தனிமையில் இருந்தாலும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஏனெனில், கூட்டத்திலும் தனிமையிலும் அவர்கள் மகிழ்ச்சியைத் தேடுவதில்லை. தங்களுக்குள்ளேயே தேடி அடைகிறார்கள்.
ஏன் இந்தத் தேடல்?
விவேகானந்தர் சொல்கிறார்: முழுமையைத் தேடிப் பயணிப்பதாக மனிதர்கள் கூறுகின்றனர். இந்தத் தேடலில் முழுமை கிடைக்காது. ஏனெனில், நீ ஏற்கெனவே முழுமையாகத்தான் இருக்கிறாய். கடவுளை ஏன் மனிதன் தேட வேண்டும்? ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும், கடவுளிடமும் மகானிடமும் முழுமை தேடி ஓடுவது ஏன்? அது உன்னுள்ளேயே உள்ளது. வெளியே இருப்பதாக உணர்வது அறியாமை. உனக்குள்ளேயே இருக்கும்.
கடவுளே அவரைத் தேடிக் கண்டடையுமாறு உன்னைத் தூண்டுகிறார். கோயில்களில், தேவாலயங்களில், மசூதிகளில் தேடி அலைந்து திரும்பி விடுகிறாய். நீ இந்நாள் வரை எங்கெல்லாமோ தேடியது உன்னுள் இருப்பதையும் அது நீயே என்பதையும், உன் உடலும் ஆன்மாவுமே அதுவாக இருப்பதையும் கண்டுகொள்கிறாய்.
விவிலியம் அதைத்தான் சொல்கிறது. இதோ, இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுவதற்கும் ஏதுவிராது, இதோ தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் (புதிய ஏற்பாடு – லூக்கா: 17:21 வசனம்)
தேடல் என்பது என்ன?
வேதங்களில் ஒரு அபூர்வமான கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனது தேடல் என்பது எதைக் குறிக்கிறது. தன்னிடமிருந்து தன் சுயத்திலிருந்து அவன் வெளியேறுகிறான். தன்னுள்ளே செல்ல அவன் அறிந்தான் இல்லை. இது எப்படி என்றால் ஒருவன் தன் வீட்டைவிட்டு அயலான் வீட்டில் நுழைவதை ஒத்திருக்கிறது. தன்னுள்ளே வெறுமையை உணர்ந்த ஒரு மனிதன் அதை வெற்றிகொள்ள அயலான் வீட்டுக்குள் செல்கிறான்.
உடலளவில் சென்றாலும், மனத்தளவில் சென்றாலும் தன்னிலிருந்து செல்வதாகவே கருதுகிறான். என்ன நேரிடுகிறது என்றால் இந்தத் தேடல் நமது உண்மை இயல்பை உணர்த்தத் தவறுகிறது. எங்கே வேண்டுமானாலும் அலையலாம். மகிழ்ச்சியும் பூரணமும் இதனால் கிட்டும் என்று நம்பலாம். ஆனால், நமது இலக்கிலிருந்து நாம் விலகிச்சென்றுகொண்டே இருக்கிறோம். அயலான் வீட்டுக்குச் சென்றதால் நாம் மிக உயர்ந்த சிகரங்களில் சஞ்சரிப்பதாக மனப்பால் குடிக்கலாம். ஆனால் அது அறியாமை.
இங்கு, அங்கு என்பதில் எந்தப் பொருளுமில்லை. இங்கு என்ன உள்ளதோ அதுதான் அங்கும் உள்ளது. உண்மை அறிந்தவனுக்கு எல்லாமே இப்போது இங்கே இருக்கிறது.
“இங்கே, இங்கே ஞானம் இருக்கிறது. அதோ அங்கே அங்கே அஞ்ஞானம் இருக்கிறது” என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
மோட்சம் (ஆன்ம விடுதலை) என்பது ஒரு குறிப்பிட்ட இடம் அன்று. அதை அடைய ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போவது போன்றது அல்ல. அஞ்ஞானத்தை அழித்துவிட்டால் மனத்தில் விழுந்த முடிச்சு அவிழ்ந்துவிடும். மோட்சம் கிடைத்துவிடும்.
‘ஆத்மனை அறிந்தவன் எவனோ அவனுக்கு பிரம்ம நிர்வாணம் சித்திக்கும். ஆன்மிக விடுதலை பரிபூரணமாகக் கிடைத்துவிடும்.- அவன் எங்கிருந்தாலும் சரியே’ என்கிறது பகவத் கீதை (அத்:26)
அகத்தில் உண்மைத் தேடல்
ஆன்மிக உணர்வே ஆகச் சிறந்த வல்லமை. இது நம் ஒவ்வொருவர் உள்ளேயும் இருக்கிறது. ஆகவே, தேடல் என்பது - அதைத் தேடல் என்று சொல்வீர்களாயின் அது உள்ளே தேடுவதையே குறிக்கும். ஆகவே, புறத்தே நாம் செய்யும் சாதனைகளுக்கும் அடையும் பெருமைகளுக்கும் தொடர்பே இல்லை.
உபநிடத ஞானம்
இன்று மனிதகுலம் ஒரு மாபெரும் அழிவு அலையின் முன்னே நிற்பதுபோல் எண்ணி அஞ்சுகிறது. இந்நேரத்தில் உபநிடதங்கள் பண்டைய முனிவர்களின் ஆலோசனைகளாக ஆறுதல் அளிக்க வல்லவை. அலெக்சாந்தர் கூறுகிறான். நான் இந்தியாவை வெற்றி கொண்டேன். உபநிடதங்கள் என்னை வெற்றிகொண்டன.
விவேகானந்தர் முழங்குகிறார்:
‘ஆற்றல்! ஆற்றல்! இதைத்தான் உபநிடதங்கள் மனிதனுக்கு வேண்டுமென உபதேசிக்கின்றன. பலவீனம் வேண்டாம் நோய் வேண்டாம் சின்னக் கவலைகள் நம்மைத் தின்ன விடவேண்டாம்.
மனிதனுக்கு இயல்பிலேயே பலவீனங்கள் உண்டல்லவா என்று கேட்கிறீர்கள்.
உபநிடதங்கள் ஆமோதிக்கின்றன. ஆனால், புழுதியைப் புழுதியால் கழுவ முடியுமா? பாவத்தைப் பாவத்தால் கழுவ முடியுமா? பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? என்று கேட்கின்றன உபநிடதங்கள்.
‘தெய்வங்களே!
எம்மை உண்பீர் எமக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர்! உலகத்துக்கு உணவாவீர்!
உமக்கு நன்று
தெய்வங்களே!
காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது
அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று
…உயிர் நன்று! சாதல் இனிது!
எல்லா உயிரும் இன்பம் பெறுக!
எல்லா உடலும் நோய் தீர்க!’ என்று எதிரொலிக்கிறார் பாரதி.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com