

கன்னி ராசி வாசகர்களே!
கனவிலும், கற்பனையிலும் மாறி மாறிச் சஞ்சரிப்பவர் நீங்கள். சுக்கிரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். உங்கள் ராசிக்கு நான்காம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடிவரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் தளரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை 5-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் அதுமுதல் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். திருமணம், சீமந்தம், காதுகுத்து, புதுமனைப் புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்குத் தள்ளிப்போன திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, வேலை எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும்.
01.09.2020 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டுக்குச் செல்வதால் தந்தையுடன் சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள் வந்துபோகும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது நன்கு படித்துப் பார்த்துக் கையெழுத்திடுங்கள். கேது ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பழைய கடன் தீரும். நவீன ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றுவீர்கள். அரிமா, ரோட்டரி சங்கத்தில் மருத்துவ முகாம்களை முன்னின்று நடத்துவீர்கள்.
14.04.2020 முதல் 25.12.2020 வரை சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். கூடாநட்பை இக்காலக்கட்டத்தில் தவிர்க்க வேண்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் கழிவுநீர், குடிநீர்ப் பிரச்சினை வந்துபோகும். 26.12.2020 முதல் சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காகச் சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்விகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள்.
12.8.2020 முதல் 26.10.2020 வரை மற்றும் 9.12.2020 முதல் 18.2.2021 வரை செவ்வாய் 8-ல் மறைவதால் சகோதரியின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்விகச் சொத்துப் பிரச்சினையை முடிந்த வரை பேசித் தீர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்குக் கணிசமாக ஆதாயமுண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்து வராமல் போன பதவி உயர்வு ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கும். அவ்வப்போது உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். என்றாலும் மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும்.
இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் சின்னச் சின்ன இடர்பாடுகள் தந்தாலும், தைரியமாக எதிர்கொண்டு பிற்பகுதியில் சாதிக்க வைக்கும்.
பரிகாரம் : அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரரைச் சென்று வணங்குங்கள். தந்தையில்லாப் பிள்ளைக்கு உதவுங்கள். மனநிம்மதி உண்டாகும்.