Published : 14 Apr 2020 08:45 AM
Last Updated : 14 Apr 2020 08:45 AM

தமிழ்ப் புத்தாண்டு சார்வரி வருடப் பலன்கள் - விருச்சிகம்

விருச்சிக ராசி வாசகர்களே!

தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்குச் சந்திரன் 2-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இங்கிதமாகப் பேசி முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தேடி வருவார்கள். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். இந்தத் தமிழ் வருடம் பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும்.

வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிச் சிறப்பாக நடந்தேறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேற்று மொழி பேசுபவர்களால் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கப் பாருங்கள். இடவசதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் இனந்தெரியாத சின்னச் சின்னக் கவலை வந்துபோகும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது. 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 2-ம் வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை 3-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாம் அல்லது மூன்றாம் முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒருசிலர் விலகிச் செல்வார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துபோகும். என்றாலும், தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும்.

1.9.2020 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது நிற்பதால் தலைசுற்றல், முன்கோபம், எதிலும் ஒருவிதச் சலிப்பு வந்து நீங்கும். வாயுப் பதார்த்தங்கள், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 1.9.2020 முதல் 7-ல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் கருத்துவேறுபாடு, மன உளைச்சல், காரியத் தடைகள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வந்து போகும்.

சனிபகவான் 14.04.2020 முதல் 25.12.2020 வரை பாதச்சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கறாராக இருங்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். 26.12.2020 முதல் சனிபகவான் 3-ம் வீட்டுக்குள் நுழைவதால் புதுச் சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவுவார்கள். வேற்று மொழிக்காரர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும். வேலை தேடி அலையும் உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. என்றாலும், அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்விகச் சொத்துக்கான வரியைச் செலுத்திச் சரியாகப் பராமரியுங்கள். நீண்ட நாள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைக்கும்படி சில அதிரடித் திட்டங்களைச் செய்வீர்கள். விளம்பர உத்தியால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாறுவார்கள். புது பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள்.

பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி அவ்வப்போது விமர்சனங்களும், குறைகளும் வந்த வண்ணம் இருக்கும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பள உயர்வுடன் சலுகைகளும் உண்டு. கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

இந்த சார்வரி ஆண்டு ஒருபக்கம் அனுபவ அறிவையும், செலவையும் தந்தாலும், மற்றொரு பக்கம் திடீர் வருமானத்தையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் கால பைரவரைச் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆரோக்கியம் சீராகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x