Published : 14 Apr 2020 08:29 am

Updated : 14 Apr 2020 08:29 am

 

Published : 14 Apr 2020 08:29 AM
Last Updated : 14 Apr 2020 08:29 AM

தமிழ்ப் புத்தாண்டு சார்வரி வருடப் பலன்கள் - மகரம்

tamil-newyear

மகர ராசி வாசகர்களே!

ஊர், உலகத்தைவிட உள்மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்ப வர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் நீண்டநாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றிக் குறைத்துப் பேச வேண்டாம். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அத்தியாவசியச் செலவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.


இந்த ஆண்டு முழுக்க குருபகவான் உங்கள் ராசிக்குச் சரியில்லாததால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஒருவிதப் படபடப்பு, வீண் பிடிவாதம், தலைசுற்றல், வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி, ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும், முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்க்க வேண்டும். மனைவிக்கு தைராய்டு, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் மனம்விட்டுப் பேசித் தீர்க்கப் பாருங்கள். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகைகளை யாரிடமும் இருந்து வாங்கி இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டாம்.
1.9.2020 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால் பங்குச் சந்தையில் லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகப் பெரியோரைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. உங்களின் திட்டங்களை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். அவ்வப்போது உங்கள் மீது எரிந்து விழுவார்கள். அனுசரித்துச் செல்ல வேண்டும். சிலர் தங்களது பிள்ளைகளை உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும்.

வருடத் தொடக்கம் முதல் 25.12.2020 வரை விரயச் சனி நடைபெறுவதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போங்கள். வீண் சந்தேகங்கள், சேமிக்க முடியாதபடி செலவுகள் உண்டாகும். 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி தொடர்வதால் பெரிய நோய்கள் தொடர்பான அச்சம் இருக்கும். நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

3.5.2020 முதல் 4.6.2020 வரை மற்றும் 30.7.2020 முதல் 31.8.2020 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள், பழி வந்து போகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும், பிரச்சினைகளும் வரும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்திகளைக் கையாளுவீர்கள். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆனி, மாசி மாதங்களில் கிடைக்கும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். கணினித் துறையினருக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களா லும் உங்களை அலைக்கழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுக்கும்.

பரிகாரம் : மதுரை மாவட்டம், பசுமலையில் அருள்பாலிக்கும் விபூதி விநாயகரைச் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களின்
பசியைப் போக்குங்கள். மகிழ்ச்சி தொடங்கும்.


பரிகாரம்தமிழ்ப் புத்தாண்டுவருடப் பலன்கள்மகரம்Tamil Newyearமகர ராசி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author