

கும்ப ராசி வாசகர்களே!
நியாயமாகத் தனக்குக் கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரத்தில் விட்டுக் கொடுப்பவர் நீங்கள். ராசிக்குச் சந்திரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்த சார்வரி வருடம் பிறப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாத சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் திடீர்ப் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான், லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், புதுமனைப் புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் குடமுழுக்குக்குத் தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.
எங்கே சென்றாலும் வரவேற்பு இருக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
01.09.2020 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ம் வீட்டில் கேது நீடிப்பதால் நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும். உத்யோகத்தில் போராடி முன்னேறுவீர்கள். 01.09.2020 முதல் ராகு 4-ம் வீட்டுக்கு வருவதால் கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வேற்றுமதத்தவர், இனத்தவர்களால் உதவிகள் உண்டு.
14.04.2020 முதல் 25.12.2020 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்போது உங்களை வந்து சந்திப்பார்கள். வேலையில்லாமல் மன உளைச்சலுடன் இருந்தீர்களே, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உங்களின் நிலையறிந்து உதவுவார்கள். 26.12.2020 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் அலைச்சல், வேலைச்சுமை, பதற்றம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகங்கள் வரக்கூடும். யாருக்காக வும் உத்திரவாதக் கையெழுத்து போடாதீர்கள்.
31.08.2020 முதல் 28.9.2020 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதனால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை வரும். வியாபாரத்தில் கடையை விரிவு படுத்துவீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பிப் பணிபுரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி, தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது.
நாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும், மன அமைதியையும் அள்ளித்தரும்.
பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருள்பாலிக்கும் பிரத்தியங்கரா தேவியைச் சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.