

மீன ராசி வாசகர்களே!
மென்மையும், விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்குப் பத்தாம் ராசியில் இந்த சார்வரி வருடம் தொடங்குவதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல பதில் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடத்துக்கு அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலியவந்து பேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்களும் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.
13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், புதுமனைப் புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இனி, பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள்.
1.9.2020 முதல் ராகு, 3-ம் வீட்டுக்குள் நுழைவதால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கும். பிரபலங்களால் உதவி கிடைக்கும். அவர்களின் சுபநிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். சிலர் வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டுக்குக் குடிபுகுவார்கள். வங்கியில் கடன் கிடைக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு இப்போது பலன் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். கேது, 9-ல் நுழைவதால் தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். தந்தைவழி உறவினர்களால் மன உளைச்சல், செலவுகள் அதிகரிக்கும்.
14.04.2020 முதல் 25.12.2020 வரை சனி பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். 26.12.2020 முதல் 11-ம் வீட்டுக்குச் சனி நுழைவதால் உத்தியோகத்தில் பிரச்சினைகள் நீங்கும். வேலை தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தாழ்வுமனப் பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.
28.9.2020 முதல் 23.10.2020 வரை சுக்கிரன் 6-ல் உள்ள காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயல்வீர்கள்.
வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர உத்திகளைக் கையாள்வீர்கள். ஆவணி மாதத்தில் லாபம் கணிசமாக உயரும். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிட்டும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். வேலையைத் தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள்.
இந்தப் புத்தாண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதாக அமையும்.
பரிகாரம்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு பத்திரகாளியைச் சென்று வணங்குங்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். பிரச்சினைகள் விலகும்.