

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
கடக ராசி வாசகர்களே!
தொலைநோக்குச் சிந்தனையுடையவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் இனந்தெரியாத சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனத்துக்குத் தன்னம்பிக்கை தந்து தலைநிமிர வைக்கும் இது. தொடர் போராட்டமாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி தங்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சுக்கிரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பழைய காலி இடத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள். வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது வேலை கிடைக்கும். 08.07.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைச் சரியாகப் பூட்டிச் செல்லுங்கள். கவனம் தேவை.
தங்க நகைகளை இரவல் தர வேண்டாம்; இரவல் வாங்கவும் வேண்டாம். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
01.09.2020 முதல் ராகு, லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிட்டும். வேற்று மதத்தினர்களின் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். பூர்விகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் தெள்ளத்தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் ஒருவிதத் தயக்கத்துடன் இருந்தீர்களே! இனி, அந்த அவலநிலை மாறும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குமளவுக்கு அனுபவ அறிவு கிடைக்கும்.
பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவுக்குப் பணவரவு உண்டு. கேது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.
14.04.2020 முதல் 25.12.2020 வரை சனி 6-ல் நிற்பதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஆனால், 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு வாகன விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள் வந்து போகும். யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம்.
5.1.2021 முதல் 29.1.2021 வரை உங்கள் ராசிக்குச் சுக்கிரன் ஆறாம் இடத்துக்குச் சென்று மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு, கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
4.5.2020 முதல் 18.6.2020 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் கீரை, காய்கறிகள், பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம். யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம்.
வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களால் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். என்றாலும், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு.
இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் கோபப்பட்டுப் பேச வைத்தாலும், மறுபக்கம் பணவரவையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: சரபேஸ்வரரைச் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். பிணிகள் அகலும்.