Published : 13 Apr 2020 09:27 am

Updated : 13 Apr 2020 09:32 am

 

Published : 13 Apr 2020 09:27 AM
Last Updated : 13 Apr 2020 09:32 AM

சிம்மம்  - தமிழ்ப் புத்தாண்டு சார்வரி வருடப் பலன்கள் 14.04.2020 முதல் 13.04.2021 வரை

tamil-new-year

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

சிம்ம ராசி வாசகர்களே!


போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாதவர் நீங்கள். சந்திரன் ராசிக்கு 5-ம் ராசியில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சொத்து வழக்குகள், பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். பிள்ளைகளால் தொல்லைகள் தானே மிஞ்சியது. இனி, அவர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களைத் தலைநிமிரச் செய்வார்கள்.

14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். வி.ஐ.பி.க்களுடன் பகைமை வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்விகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் அதுமுதல் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் அதிகரிக்கும். குடும்பத்திலும் வீண் குழப்பங்கள் வரும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும்.

01.09.2020 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குச் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனால், பதவி உயரும். சம்பளம் கூடும். நான்காம் வீட்டுக்குக் கேது வருவதால் முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு வந்து நீங்கும். பல காரியங்களில் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12.2020 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டாதீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறி முகம் மலரும். உற்சாகம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

29.1.2021 முதல் 22.2.2021 வரை உள்ள காலகட்டங்களில் சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகனம் பழுதாகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, ஒவ்வாமை, தொற்றுகள் வரக்கூடும்.

18.6.2020 முதல் 12.8.2020 வரை மற்றும் 26.10.2020 முதல் 9.12.2020 வரை செவ்வாய் 8-ல் நிற்பதால் வீடு, மனை வாங்கும் முன்னர் தாய்ப்பத்திரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிது புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களிடன் தேவையறிந்து விற்பனை செய்யுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே சிலர் சுற்றுவார்கள். அதையெல்லாம் நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடமையைச் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு ஒருபக்கம் அலைச்சலைத் தந்தாலும் மறுபக்கம் இறுதிப் பகுதியில் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம் : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழிசூரில் அருள்பாலிக்கும் அருளாலீசுவரரைச் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுங்கள். வசதி, வாய்ப்பு பெருகும்.


சிம்ம ராசிதமிழ்ப் புத்தாண்டுவருடப் பலன்கள்Tamil New Yearபரிகாரம்சிம்மம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author