

உஷாதேவி
திருப்பானாழ்வார், கங்கையிலும் புனிதமான காவிரி நதிக்கரையில் உறையூரில் நெற்பயிர் நிறைந்த கழனியில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இறைவனையும், அரசனையும் புகழ்ந்து பாடும் பாணர் குலத்தைச் சேர்ந்த தம்பதிகள் இவரைக் கண்டெடுத்து வளர்த்தனர்.
அவர்களிடம் யாழ் பாடலைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். திருவரங்கத்துப் பெருமானின் மீது அன்புகொண்டு வைகறையில் எழுந்து, ஸ்ரீரங்கத்துக்குள்ளே தன் பாதம் பதிக்கவும் அஞ்சி ரங்கனை நினைத்து காவிரிக் கரையிலேயே நின்று இருகரம் கூப்பி துதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திருக்கோயிலின் அர்ச்சகர் லோக சாரங்க முனி அரங்கனின் திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு போக காவிரித்துறைக்கு வந்தார். வழியில் நின்றிருந்த திருப்பாணரை விலகுமாறு பல முறை குரல் கொடுத்தார். அவர் அரங்கனை அகக்கண்ணால் கண்டு மெய்மறந்திருந்தார்.
இறைவனின் ஆணை
அர்ச்சகர் ஒரு சிறு கல் எடுத்து அவர் மீது இட்டார். திருப்பாணரின் நெற்றியில் அந்தக் கல் தாக்கி குருதி கொட்டியது. பாணர் கண் திறந்து பார்த்தார். திருவரங்கனுக்கு திருமஞ்சன நீர் எடுத்து செல்லும் வழியில் தடையாக இருந்துவிட்டேனே என அர்ச்சகரிடம் மனம் வருந்தினார். அர்ச்சகரோ, பாணனின் தலையில் குருதி கொட்டியதைப் பார்த்து மிகவும் துயரமுற்றார். அன்றைய இரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய ரங்கநாதன் அடுத்த நாள் காவிரிக் கரைக்கு சென்று திருப்பாணரை உன் தோள்மீது சுமந்து என் ஆலயம் அழைத்து வா என்று ஆணையிட்டார்.
பொழுது புலர்ந்தது. காவிரிக் கரைக்கு வந்து திருப்பாணரை தன் தோள்மீது அமர்ந்து கொள்ளுமாறு அர்ச்சகர் அழைத்தார். திருப்பாணரோ அர்ச்சகராகிய உமது தோளில் நான் அமரமாட்டேன் என மறுக்கிறார். இது திருவரங்கனின் ஆணை என்று கூறுகிறார். உடனே மறுப்பு சொல்லாமல் அர்ச்சகர் தோளில் அமர்ந்து கொண்டார். இதற்கு காரணம் திருவரங்கனின் மீது திருப்பாணர் கொண்ட அளவுக்கதிகமான அன்பாகும். லோக சாரங்க முனியின் தோளில் அமர்ந்து கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார்.
இதனால் திருப்பாணர் முனிவாகனர் எனப் பெயர் பெற்றார். அரங்கனின் கருவறையில் இறக்கிவிட்டு லோக சாரங்கர் மறைவாக நின்றார். திருப்பாணர், திருவரங்கனைக் கண்ட உடன் பாதாதிகேசமாக தரிசித்தார், அரங்கனும் தன் திவ்ய மங்கள வடிவைக் காட்டினார். திருவடிக்கமலம், பீதாம்பரம், திருவயிறு, திருஉதரபந்தம் (அரைஞாண்கயிறு) திருமார்பு, திருக்கழுத்து, திருச்செவ்வாய், வாடாத திருக்கண்கள், திருமேனி ஆகியவற்றை திருப்பாணாழ்வார் கண்டு பாடிய பத்து பாசுரமே “அமலனாதி பிரான்”.
“அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே”
என்று தன் விருப்பத்தைத் துணிவாக வெளியிட்டார். இப்படி உரைத்து மகிழ்ந்து நின்ற அவரை பெருமாள் அங்கீகரிக்க, அவரும் அனைவரும் காண அரங்கனின் திருவடிகளில் கலந்து மறைந்தார். அவன் மேனியானார் திருப்பாணார். அதுபோல இறைவனுடன் சேரும் நற்பேற்றை நான் பெறவில்லையே சுவாமி என மனம் வாட்டமடைந்தாள், நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com