

ஓவியர் வேதா
இந்த சிற்பம் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலில் முருகன் சன்னதிக்கு முன்பு உள்ள மண்டபத்தின் நுழைவாயிலில் இரு புறமும் உள்ள தூண்களில் உள்ளது. இந்தச் சிற்பத்தை புருஷா மிருகம் என்கின்றனர்.
ஆனால் இச்சிற்பத்தின் மனித உருவத்தில் உள்ள முக அமைப்பு ஜடா முடி அலங்காரம், பின்புறம் உள்ள சுருள் சுருளான முடி அமைப்பும் மிகவும் அழகாக இருக்கிறது. தாடியுடன் சேராத நீண்ட மெல்லிய மீசையும் கம்பீரமாக எடுத்துக் காட்டுகிறது. கழுத்திலும்; கைகளிலும்; தோளிலும் உள்ள அணிகலன்கள் சிறப்பாக உள்ளன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவர் வியாக்ரபாத முனிவராக இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் சொல்வார்கள். இவர் மிகச்சிறந்த சிவ பக்தர். இறைவனை பூஜிப்பதற்காக, வண்டுகள் தேன் குடித்த மலர்களை ஒதுக்கும் அளவு சிவன் மேல் பிரியம் உள்ளவர்.
பிரம்ம முகூர்த்த வேளையில் வண்டுகள் மொய்க்காத மலர்களைப் பறிக்க விரைவாக நடப்பதற்காகவும் மரங்களின் மீது விரைவாக ஏறுவதற்காகவும் இறைவனை வேண்டிப் புலியின் கால்களையும்; கூர்மையான கண்களையும் பெற்றார் என்று கதை உண்டு. நடராஜரின் திருப்பாதத்தருகே இவரும் பதஞ்சலி முனிவரும் எப்போதும் இருக்கும் பேறுபெற்றார்கள்.