

என். கௌரி
சிற்பக் கலைஞர் வி.ஆர். ரவிராமின் ‘காப்பர் மியூஸஸ்’ (Copper Muses) என்ற தலைப்பிலான சிற்பக் காட்சி சென்னை தட்சிணச் சித்ராவில் மார்ச் 7 முதல் நடைபெற்று வருகிறது. விநாயகர், கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் பரந்தாமன், ஒரு பாதி கருடன் - ஒரு பாதி அனுமான், காமதேனு என இவரது சிற்ப உலகம் கடவுளர்களால் நிறைந்திருக்கிறது.
சோழமண்டம் ஓவியர்கள் கிராமத்தில் வசித்துவரும் ரவிராம் கல்லூரிக்குச் சென்று ஓவியக்கலையைப் பயின்றவரில்லை. பேசும், கேட்கும் திறனற்ற அவர், கலைஞரான தன் பெரியப்பா ஜானகிராமனிடம் சிறுவயதிலிருந்தே ஓவிய, சிற்பக் கலையைப் பயின்றுள்ளார். அவரிடம் கற்றுக்கொண்ட கலை நுணுக்கங்களை வைத்து தனக்கான தனிக் கலை பாணியை உருவாக்கியிருக்கிறார்.
“எங்கள் பெரியப்பா பி.வி. ஜானகிராமன் தன் பணிகளை மேற்கொள்ளும்போது எப்போதும் ரவிராமை உடன் வைத்திருப்பார். தான் சிற்பங்கள் வடிக்கும்போது அவனிடமும் ஒரு சிறிய செப்புக் காகிதத்தைக்கொடுத்து அதில் தான் செய்வதுமாதிரியே செய்ய வேண்டும் என்று அவனுக்குச் சொல்லிக்கொடுப்பார்.
ஒரு கட்டத்தில், அவரிடம் கற்றுக்கொண்ட சிற்ப நுட்பங்களை வைத்து ரவிராமே தனித்துவமாகச் செப்புச் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினார். ஒரு சிற்பத்தை உருவாக்க இருபதிலிருந்து முப்பது நாட்களுக்கு மேல்கூட ஆகும். அதற்கான எல்லா தொழில்நுட்பங்களையும் அவரே ஆர்வத்துடன் கற்றுக்கொண்டுச் செய்துவருகிறார். சென்னையில் மட்டுமல்லாமல் பெங்களூருவிலும் அவரது படைப்புகளுக்கு வரவேற்பு இருக்கிறது” என்று பகிர்ந்துகொள்கிறார் ரவிராமின் சகோதரர் ராஜாராம்.
இந்த கண்காட்சியில் ரவிராமின் 35 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.