அகத்தைத் தேடி 24: முழங்கு சன்யாசி!

அகத்தைத் தேடி 24: முழங்கு சன்யாசி!
Updated on
3 min read

தஞ்சாவூர்க்கவிராயர்

மழைக் காலத்தில் கூரைத் தளத்தின் மூலைகளில் வைக்கப்பட்டிருக்கும் புலித்தலை பொம்மையின் வாயிலிருந்து மழைநீர் கொட்டுவதைப் பார்த்திருக்கலாம். அது பொம்மையின் வாயிலிருந்து வருவதில்லை வானத்திலிருந்து வருவதென்று நமக்குத் தெரியும். துறவிகளின் வாயிலிருந்து வருகிற உபதேச மொழிகளும் அப்படித்தான். உண்மையில் அவை இறைவனிடமிருந்தே வருகின்றன என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் விவேகானந்தரின் வாயிலிருந்து அருவிபோல் பெருக்கெடுத்த வேதாந்தப் பிரசங்கமும் அவ்வாறனதுதான். அமெரிக்காவில் சிகாகோ மட்டுமன்றி புரூக்ளின் முதலான பெரு நகரங்களிலும் விவேகானந்தரின் பிரசங்க அரங்குகள் நிகழ்ந்தன.

இத்தகைய பிரசங்கங்கள் விவேகானந்தருக்கு விரைவிலேயே பிடிக்காமல் போயின. இந்திய வேதாந்தம் குறித்த பிரமிப்பை தமது பேச்சு ஊட்டுவதும் இதைக் கண்டு அதிசயிக்கக் கூட்டமாக மக்கள் வருவதும் அவருக்கு உடன்பாடாக இல்லை. தரையில் மிகவும் நெருக்கமாக ஆன்மிக அன்பர்களுடன் அமர்ந்து உரையாடுவதையே அவர் விரும்பினார். அவரது சீடர்களில் ஒருவருக்கு செயின்ட் லாரன்ஸ் நதியில் தவ்ஸண்ட் ஐலண்டு பார்க் என்ற தீவு சொந்தமாக இருந்தது. அங்கிருந்த அழகிய குடில் ஒன்று விவேகானந்தர் தங்கி உரையாடும் இடமாக உருவானது.

வால்டோ எழுதிய குறிப்புகள்

விவேகானந்தரின் வேதாந்தச் சொற்பொழிவுகளைவிட இத்தகைய தனிப்பட்ட உரையாடல்களில் மிகவும் நுண்மையான அவரது அகத் தேடல் குறித்த குரலைக் கேட்க முடியும். செல்வி வால்டோ, சுவாமிகளின் இத்தகைய உரையாடல்களைக் குறிப்பெடுப்பதில் உற்சாகத்துடன் ஈடுபட்டார்.

பக்கம் பக்கமாக அவர் எழுதி வைத்த குறிப்புகள் அமெரிக்காவிலேயே நூலாக வெளிவந்தன. ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கும் விவேகானந்தரை தொந்தரவு செய்ய விரும்பாத சீடர்களுக்காக, முன்னர் அவர் வாய்மொழியாக உரையாடிய குறிப்புகளை வாசித்துக் காண்பிப்பார் வால்டோ. சீடர்கள் அகன்றதும் கண்விழிக்கும் விவேகானந்தர், அவர் எடுத்த குறிப்புகள் தனது பேச்சைத் தானே கேட்பதுபோல் அத்தனை துல்லியமாக இருக்கிறது என்பாராம்.

வேதாகமத்திலிருந்து குறிப்புகள்

விவேகானந்தர், சில வேளைகளில் கூடத்தில் குறுக்கும்நெடுக்குமாக நடப்பார். அப்போது அவர் பேச்சு அருவிபோல் தங்கு தடையின்றி பொழியும்.

அரியதொரு ஒற்றுமையாக அவரது அமெரிக்கச் சீடர்கள் பன்னிருவர் அவருடன் எப்போதும் இருந்தனர். அவர் உரையாடத் தொடங்கிய முதல் நாளில் அவர் கைகளில் பைபிள் இருந்தது.

“இங்கு வந்திருக்கும் நீங்கள் கிறிஸ்தவர்கள். ஆகவே இன்றைய உரையாடலை நாம் பைபிளில் தொடங் கலாம்” என்றார் புன்முறுவலுடன்.

‘ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாக இருந்தது’ என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். இந்து மதத்தின் தத்துவங்களோடு ஒப்பிட்டு வார்த்தை எப்படி இந்து மதத்தில் கடவுள்களாகவும் இயற்கையாகவும் இரு வேறு வெளிப்பாடுகளாய் பரிணமித் தது என்று விளக்கினார்.

தங்கச் சங்கிலி இரும்புச் சங்கிலி

நன்மை தீமைகள் பற்றிய விவேகானந்தரின் கருத்துக்களை அமெரிக்கர்கள் கைதட்டி வரவேற்றனர். தீமை இரும்புச் சங்கிலி என்றால் நன்மை தங்கச் சங்கிலி. இரண்டுமே சங்கிலிகள்தான். எதுவும் உன்னைப் பிணைக்கலாகாது. இரும்புச் சங்கிலியின் பிடியைத் தளர்த்த தங்கச் சங்கிலி மீதான பிடியை விடு. தீமையின் முள் நமது உடலில் தைத்துவிட்டால் அதே முட்செடியிடமிருந்து மற்றொரு முள்ளை எடுத்து முதல் முள்ளை நீக்கவேண்டும். பிறகு இரண்டையும் எறிந்துவிட வேண்டும் என்றார்.

வேதாந்தத் தத்துவத்தின் சாரமாக விவாகானந்தர் பின்வரும் உருவகக் கதையை கூறுவது வழக்கம்!

ஒரு மரத்தில் இரண்டு பொன்நிறப் பறவைகள் உட்கார்ந்திருந்தன. மேலே உச்சியில் ஒன்று. மரத்தின் கீழுள்ள கிளையில் மற்றொன்று. மேலிருந்த பறவை தனது இருப்பின் நிறைவில் மூழ்கித் திளைத்து, மகிழ்ந்து கம்பீரமாக வீற்றிருந்தது. கீழுள்ள பறவை அமைதியற்று மரத்தின் பழங் களை இங்குமங்கும் சென்று கொத்தித் தின்றுகொண்டிருந்தது. சில பழங்கள் இனித்தன, சில பழங்கள் கசந்தன.

ஒரு முறை கீழிருந்த பறவை மிகவும் கசப்பான பழத்தை தின்றுவிட்டது. சற்றே மேலே பார்த்தது. கம்பீரமான பறவை கண்ணில் பட்டது. ஆனால் அதைப் பற்றி நினைவு இன்றி பழையபடி பழங்களைத் தின்னலாயிற்று. மீண்டும் கசப்புப் பழத்தை சாப்பிட்டுவிட்டது.

இந்த முறை தத்தித் தாவி மேலிருந்த பறவையிடம் சென்றது. இப்படிப் பலமுறை நடந்தது. இப்போது மேலிருந்த பறவையை மிக நெருங்கி அதற்குள் ஒன்றாகவே கலந்துவிட்டது கீழிருந்த பறவை. அப்போதுதான் அதற்கு ஒரு உண்மை தெரிந்தது. மரத்தில் இரண்டு பறவைகள் இல்லவே இல்லை. இதுவரை தானேதான் மேலிருந்த பறவை என்ற உண்மையும் புரிந்தது. பழங்கள் மீது நாட்டமின்றி தன் இருப்பில் தானே மகிழ்ந்திருந்த பறவை தன்னையன்றி வேறில்லை என்று கண்டுகொண்டது.

அமெரிக்கப் பெண்களைக் கண்ட பிறகு இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்களும் யோசனைகளும் விவேகானந்தருக்குள் உதயமாயின. முதலில் கல்கத்தாவில் இதற்கான பள்ளியும் பயிற்சிக் கூடமும் ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரது சீடரான அமெரிக்கப் பெண்மணி ஒருவரையும் அவர் தெரிவு செய்தார்.

அமெரிக்கப் பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து அவரைப் பார்க்கும் ஆவலில் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தனர். விவேகானந்தரைப் பார்த்து இவ்வுலகில் ஏசுநாதர் இன்னும் உயிரோடு இருந்தால் எப்படி இவரைத் தரிசிக்க செல்வோமோ அதேபோல் உங்களை நாடிவந்துள்ளோம். எங்களுக்கு உங்களின் நல்லுரை வேண்டும் என்று வணங்கினர்.

விவேகானந்தர் அவர்களை ஏற்று அவர்களுக்கு இந்தியத் தத்துவ ஞானத்தை கதைகள் வாயிலாக எடுத்துரைத்தார். அவரது உரையாடல்களில் சங்கரர், ராமானுஜர் போன்றோரின் ஞான மொழிகள், நாரதரின் பக்தி சூத்திரங்கள், யோகப் பயிற்சி முறைகள் தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்.

உரையாடலின் நடுவே எழுந்து சென்ற விவேகானந்தர் சற்றுநேரம் கழித்து திரும்பினார். துறவியின் பாடல் என்ற தலைப்பில் அவர் எழுதி எடுத்து வந்த பாடலை கம்பீரமாகப் பாடினார். ‘எழுகவலி மிகு வீரத்துறவியே’ என்று தொடங்கும் பாடல் இது.

வீடு உனக்கு இல்லை நண்பா

எந்த வீடுனைத் தாங்கிடும்

பிறவி இல்லை

மனிதமில்லை

தெய்வம் என்றொன்றில்லையே

நீயுமில்லை நானுமில்லை

ஆத்மன் ஒன்றே நிலைப்பது

அந்த ஆனந்த நிலையை

அடைந்து

முழங்கு சன்யாசி - ஓம்

தத்ஸத்.

(உண்மை தேடுவோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in