

பனையபுரம் அதியமான்
ஆற்றுக்கால் அம்மாவுக்கு பொங்கல் தமிழர்கள் போற்றும் சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியை அம்மனாக வணங்கி பொங்கல் வைத்துக் கொண்டாடும் வைபவம் 'பொங்கலா' ஆகும்.
திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் மலையாள மாதமான மகரம்-கும்பத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. கண்ணகி சரித்திரம் கதையைச் சொல்லி இந்த விழா தொடங்குகிறது. பூரம் நட்சத்திரமன்று பவுர்ணமி நாளில் நிகழும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கூடிப் பொங்கல் வைக்கின்றனர்.
கற்புக்கரசியான கண்ணகி, மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்பு, கொடுங்கல்லூர் செல்லும் வழியில், ஆற்றுக்காலில் தவமிருந்து தங்கியிருந்ததாக தலபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக, இக்கோயில் திருவிழாக் காலங்களில் பாடப்படும் “தோற்றம் பாடல்” கண்ணகி வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு விளங்குகின்றது.
ஒளிவீசும் பகவதி
ஆற்றுக்கால் பகவதி அம்மன், ஆதித் தாயாக வணங்கப்படுகிறாள். தமிழக, கேரளக் கட்டிடக் கலைகளின் பரிவர்த்தனையை இந்த ஆலயத்தில் காணலாம். மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, பார்வதி, சிவன் முக்கியமான தெய்வங்களாகக் காட்சி தருகின்றனர். வடக்கிலும், தெற்கிலும் எளிய வடிவிலான ராஜகோபுரங்கள் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கன்னிமூலையில், கணபதி, நாகர் சன்னதிகள் அமைந்துள்ளன.
ஆலயத்தின் நடுவில், அன்னை பகவதி ஒளிவீசும் முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் காலடியில் வேதாளம். அதற்கு முன்னதாக உற்சவமூர்த்தி ஜோதி வடிவாக ஒளிவீசும் காட்சி தருகிறாள். அன்னையின் இடதுபுறம் மாடன் தம்புரான் சன்னிதியும், அவரையொட்டி, ஓங்கி உயர்ந்த பனை மரமும் அமைந்துள்ளன. நான்கு திசைகளிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றுக்கால் பகவதி 12 வயதுச் சிறுமியாக முள்ளுவீட்டில் குடும்பத்தி னரின் கனவில் தோன்றி ஆலயம் கட்டச் சொன்னதாக ஒரு தொன்மக் கதையும் நிலவுகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆலயத்தின் நிர்வாகத்தை, ‘முள்ளு வீடு' குடும்பத்தினர் கவனித்து வந்தனர். 1970 முதல் ஆற்றுக்கால் பகவதி கோவில் அறக்கட்டளை மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆதிசங்கரருக்கு பின்பு , கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த, வித்யாதி ராஜபரம பட்டாரச் சட்டம்பி சுவாமிகள், இத்தலத்தில் தங்கி வாழ்ந்துள்ளார். அரிய சக்திகள் கொண்ட இவருக்கு தனி சந்நிதி, அம்மன் ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கண்ணகி கதைப் பாடல்
அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தல், கண்ணகி கதையை பாட்டாகப் பாடுவது, பொங்கல் நைவேத்தியம், தாலப்பொலி, குத்தியோட்டம், எழுந்தருளல் நிறைவு சடங்குகள் ஆகியவை பத்து நாட்கள் திருவிழாவில் நடைபெறும்.
லட்சக்கணக்கான பெண்கள் கூடும் பொங்கல் விழா, ஆண்டுதோறும் பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கையால் உலகப் புகழ் பெற்றுவருகிறது. பொங்கல் நாளன்று காலை பத்து இருபது மணிக்கு ஆலயம் சார்பில், பக்தர்களின் அடுப்பில் தீ மூட்டப்படும். அனைவரும் தங்கள் அடுப்பில் பொங்கல் வைப்பார்கள்.
பிற்பகல் 2.15-க்கு ஆலயத்தின் சார்பாக ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் தீர்த்த நீரைத் தெளிப்பார்கள். அதன்மூலம், அந்தப் பொங்கலை அம்மன் ஏற்றுக்கொள்வதாக ஐதிகம். ஹெலிகாப்டரில் இருந்து வானத்திலிருந்து பூமழை பொழியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். கடந்த ஆண்டு 35 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழர்களின் காவிய நாயகியான கண்ணகியின் தெய்வ வடிவாக வணங்கப்படும் ஆற்றுக்கால் பகவதி, கேரளத்துப் பெண்களால் ஆட்டுக்காலம்மா என்று வாஞ்சையுடன் வணங்கப்படுகிறார். ஆட்டுக்காலம்மாவின் அருள் இந்த உலகை நிரப்பட்டும்.
| தாலப்பொலியும் குத்தியோட்ட விரதமும் பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும் வழிபாடு இது. 12 வயதுக்குட்பட்ட,சிறுமிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அவர்கள் நோயின்றி வாழவும், அழகு செல்வம் அதிகரிக்கவும், கல்வி முன்னேற்றத்துக்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. குத்தியோட்டம் விரதமிருக்கும் சிறுமிகள், தங்கள் விலாப்புறம் சிறு கொக்கிகளால் அலகு குத்திக்கொள்வார்கள். யானை மீதேறிய அம்மன் ஊர்வலம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலுக்கு மேளதாளம் முழங்க சென்று, மறுநாள் ஆலயத்துக்கு திரும்பும். அதன் பின்பு இந்த விரதம் நிறைவுபெறுகிறது. |