

ஒரு நாள் நள்ளிரவில், முல்லா தனது வீட்டின் படுக்கையறை ஜன்னலை வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நகரக் காவலன், ஏன் இங்கே நிற்கிறீர்கள்? என்று கேட்டார்.
“ஆமாம். நான் உறக்கத்தில் எழுந்து நடப்பதாக என் வீட்டார் சொல்கிறார்கள். அதனால்தான், உறக்கத்தில் நடக்கிறேனா என்பதைப் பார்க்க இங்கே நின்றுகொண்டிருக்கிறேன். எழுந்து நடக்க இருப்பவனைஆச்சரியப்படுத்தக் காத்திருக்கிறேன்” என்றார் முல்லா.
சூழ்நிலைகள் மாறும்
மழை சோவென்று பெய்துகொண்டிருந்தது. அந்த ஊரில் மதிக்கத்தக்க மனிதராக இருந்த அஹா அகில், ஒதுங்க இடம் தேடி ஓடிக்கொண்டிருந்தார். அப்போது தன் வீட்டிலிருந்து வெளியே வந்த முல்லா, “கடவுள் அளிக்கும் கொடையிலிருந்து தப்பிக்க உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? தெய்வபக்தி கொண்ட உங்களுக்கு மழை என்பது அருட்கொடை என்று தெரியவில்லையா?” என்று கூச்சலிட்டார்.
அஹாவுக்கு தனது பெருமை குலைந்துபோவதில் விருப்பமில்லை. தான் அப்படி நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறி, நனைந்துகொண்டே வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்தவுடன் குளிர் தாக்கியதால் உடம்பைத் துடைத்துக்கொண்டு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுக்கையறைக்குச் சென்றார்.
படுக்கையறை ஜன்னலிலிருந்து அப்போது ஒரு காட்சியைக் கண்டார். மழையிலிருந்து தப்பிப்பதற்காக சாலையில் ஒதுங்குவதற்கு இடம் தேடி ஓடிக்கொண்டிருந்தார் முல்லா. “நீங்கள் ஏன் கடவுளின் கொடையிலிருந்து தப்பிக்கிறீர்கள் முல்லா?” என்று கேட்டார். எனது கால்களைக் கொண்டு கடவுளின் கொடையை அழுக்காக்க விரும்பவில்லை என்று வெடுக்கென்று பதிலளித்தார் முல்லா.
தீர்ப்பு
முல்லா ஒரு கிராம நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு பதைபதைப்போடு ஓடிவந்து நுழைந்த ஒருவர், தனது புகாரைச் சொன்னார்.
‘நான் இந்தக் கிராமத்துக்கு வெளியே தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டேன். இந்தக் கிராமத்திலிருப்பவர்களில் ஒருவர்தான் அந்தச் செயலைச் செய்திருக்க வேண்டும். நீங்கள்தான் எனக்கு நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும்’ என்றார்.
முல்லா அவனைச் சோதனை செய்தார். ‘உனது உள்ளங்கி கொள்ளையடிக்கப்படவில்லையே’ என்று கேட்டார் முல்லா. புகார் சொல்ல வந்தவனும் ஆமாம் என்று பதிலளித்தார்.
‘அப்படியானால் திருடன் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அல்ல. எந்த விஷயத்தையும் இங்கே துப்புரவாகச் செய்தே பழக்கம். அதனால், உனது புகாரை நான் விசாரிக்க முடியாது’ என்று தன் முடிவை அறிவித்தார் முல்லா.
- ஷங்கர்