Published : 27 Feb 2020 08:24 AM
Last Updated : 27 Feb 2020 08:24 AM

தெய்வத்தின் குரல்: சமம் தமம்

மனம் சதாவும் இன்பம் என்று நினைக்கும் விஷயங்களை நினைத்து நினைத்துதான் நிலை கொள்ளாமல் அலைபாய்ந்தபடி இருக்கிறது. அதனால்தான் நமக்கு சாந்த சவுக்கியம் இன்னவென்று தெரியவில்லை. நானா விஷயங்களுக்காக ஆலாப் பறந்து கொண்டு நாலா திசையிலும் ஒடுகிற மனஸை அப்படி ஓடாமல் அடக்கி லட்சியம் ஒன்றிலேயே நிறுத்தலாம். அப்படி அடக்குவதற்குப் பேர்தான் சமம்.

‘விஷய வ்ராத’த்திலிருந்து உண்டாகும் தோஷத்தை அடிக்கடி நினைத்துப் பார்த்து அவற்றைத் தள்ளி – அப்புறம், ‘ஸ்வலக்ஷ்யே’- தன்னுடைய லக்ஷ்யத்தில் ‘மனஸ: நியத அவஸ்தா’ – மனசைக் கட்டுப்படுத்திய நிலையில் வைத்திருப்பது, ‘சம உச்யதே’- சமம் என்று கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், மனசை அடக்குவதே சமம்.

‘விஷய’ங்களைப் பற்றி மனம் படர்வதற்குக் காரணம் பழைய அனுபோகத்தின் சுவடு (நெடி, வாசனை என்பது) ஜன்மாந்திரமாக அதற்கு இருப்பதுதான். அந்த ஜன்மாந்திர வாசனை ஸ்தூல சரீரம் செத்துப்போன அப்புறமும் சூட்சும சரீரத்துக்குள் இருந்து கொண்டேயிருந்து, மறுபடி உயிர் இன்னொரு சரீரத்தில் பிரவேசித்துப் புனர்ஜன்மம் எடுக்கும்போது, மீளவும் தன்னுடைய வேலைத்தனத்தை ஆரம்பித்து விடுகிறது! ஆகையால் அந்த வாசனைகளை அடியோடு விட்டு விட்டால் மனசு தானாக அடங்கிப் போகும்.

‘வாசனை எனப்படும் போகானுபவத் தூண்டுதல்களை ஸதாகாலமும் விட்டொழிப்பது சமம் எனப்படும்’

மனசை அடக்குவது சமம் என்று புரிந்து கொண்டால் போதும்.

அடுத்தாற்போல் வரும் ‘தமம்’ என்பது புலன்களை அடக்குவது. ‘சம’த்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் மன அடக்கமும், புலனடக்கமும் ஒன்றோடொன்று கைகோத்துக் கொண்டு வருவதால் ‘தம’த்தைப் பற்றியும் அடிப்படைக்காக சொல்லிவிட்டு, அப்புறம் இரண்டையும் சேர்த்துக் கொஞ்சம் விஸ்தாரம் செய்கிறேன்.

ஆத்ம லோகத்தில் சேரலாம்

புலன் என்பது இந்த்ரியம். கர்மேந்த்ரியம் ஐந்து. ஞானேந்த்ரியம் ஐந்து. காரிய ரூபத்தில் ஒன்றைச் செய்ய சக்தி வாய்ந்தவை கர்மேந்திரியங்கள். கையினால் அநேக காரியங்களைச் செய்கிறோம். ‘கரம்’ – ‘கார்யம்’ என்ற வார்த்தைகளே செயல் பண்ணுவதில் அந்த அவயத்திற்கு உள்ள முக்கியத்தைக் காட்டுகின்றன.

அது ஒரு கர்மேந்த்ரியம். காலால் நடந்து, ஓடி, குதித்துக் காரியம் செய்வதால் அதுவும் ஒரு கர்மேந்த்ரியம். வாயால் பேசுகிறோம், பாடுகிறோம். ஆகையால் அதுவும் ஒரு கர்மேந்த்ரியங்களில் ஒன்றாகிறது. இன்னம் இரண்டு அவயங்கள் விஸர்ஜனம் செய்ய இருக்கின்றன. அவை ஒரு மனுஷ்ய உடம்பிலிருந்து கழிவடைகளையும், வீர்யத்தையும் தள்ளுகின்றன. இந்த ஐந்தும் கர்மேந்த்ரியங்கள்.

இப்படித் தானே ஒரு காரியத்தை உண்டாக்கிப் பண்ணுவது என்றில்லாமல் வெளியே இருக்கிற ஒன்றை அறிந்து அனுபோகம் பண்ணுவதாக உள்ள இந்த்ரியங்களுக்கு ஞானேந்த்ரியம் என்று பெயர். இப்படி ஐந்து. வெளியிலே உள்ள சப்தத்தை அறிந்து அனுபவிக்கும் காது; வெளியில் வழ வழ, சொர சொர என்று, சூடாக, ஜில்லிப்பாக – இப்படி பல தினுஸாக வஸ்துக்கள் இருப்பதாக அறிந்து அனுபவிக்கும் தோல்; வெளிப்பொருள்களின் ரூபத்தை, வர்ணத்தைப் பார்வையால் அறிந்தனுபவிக்கிற கண்; பலவித ஆகாரங்களின் ருசியைத் தித்திப்பு, கசப்பு, புளிப்பு என்றெல்லாம் அறிந்து அனுபவிக்கும் நாக்கு; பலவித வாசனைகளை அறிந்து அனுபோகம் பண்ணும் மூக்கு என்று உள்ள இந்த ஐந்தும் ஞானேந்த்ரியங்கள்.

ஒவ்வொரு இந்த்ரியமும் கொடுக்கக்கூடிய அனுபோகங்களில் உள்ள ஒரு ஆசையால்தான் ஒரு ஜீவன் இந்த மாயா லோகத்தோடேயே கட்டிப்போடப்படுவது. இவற்றை அடக்கி வைத்தால்தான் ஆத்மலோகத்தில் சேரலாம். அப்படி அடக்குவதுதான் ‘தமம்’.

மனசை அடக்கு

‘தமம்’, ‘சமம்’ என்ற இரண்டுக்கும் நேர் அர்த்தம் வெறுமே அடக்குவது என்பது தான். மனசை அடக்குவது, புலனை அடக்குவது என்றில்லை. ஆனாலும் வெளிப் பொருள்களை அறிந்து அனுபோகம் பண்ணுவதாகவும், அதற்கு சகாயமாகக் காரியம் பண்ணுவதாகவும் உள்ள இந்திரியங்களை அப்படிப் பண்ணாதபடி அடக்குவது தனி விஷயமாகவும், தனக்குத்தானே எண்ணங்களை உற்பத்தி பண்ணிக் கொண்டு ஸதா சஞ்சலித்துக் கொண்டிருக்கும் மனசை அடக்குவது தனி விஷயமாகவும் இருப்பதால் இந்த இரண்டுவித அடக்கத்துக்கும் வித்தியாசம் தெரியணும் என்று ‘சமம்’ என்பதை மனவடக்கம் என்றும், ‘தமம்’ என்பதை புலனடக்கம் என்றும் அர்த்தம் செய்து கொள்ளும்படி வைத்திருக்கிறார்கள்.

இரண்டுமே அடக்கம்தான் என்பதால்தான் ஆசார்யாளே ‘ஷட்பதீ ஸ்தோத்ர’ ஆரம்பத்தில், வழக்கமான பிரயோகத்துக்கு மாறுதலாக ‘மனசை அடக்கு’ என்கிற இடத்தில் ‘தமய மன:’ என்றும் ‘வெளிவிஷயக் கானல் நீருக்கு ஒடும் புலன்களை அடக்கு’ என்கிற இடத்தில் ‘சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்’ என்று போட்டிருக்கிறார்.

‘தம’த்திலிருந்து ‘தமனம்’, ‘தாந்தி’ என்ற வார்த்தைகளும், ‘சம’த்திலிருந்து ‘சமனம்’,’சாந்தி’ ஆகிய வார்த்தைகளும் வந்திருக்கின்றன. தமனம்-தாந்தியைவிட சமனம் – சாந்தி அதிகம் வழக்கிலிருக்கிறது. உஷ்ண சமனம், பித்த சமனம், கோபத்தை சமனம் பண்ணுவது என்றெல்லாம் சொல்கிறோம். ‘அடக்குவது’ என்பதுதான் அர்த்தமானாலும் அது கடுமையாகத் தெரியாமல், ‘தணிப்பது’ என்று மிதமாகத் தொனிக்கிறது!

‘சாந்தி’ என்கிற போதும் கொந்தளிப்பை அடக்குவது என்பதன் கடுமை தெரியாமல், சவுக்கியமாக அடங்கி அமைதியாகிவிட்ட தன்மையையே குறிப்பதாக இருக்கிறது.

சாந்தி-மனஸ் அடங்கிய நிலை; தாந்தி- புலனடங்கிய நிலை. யதிகளாக இருப்பவர்களை ‘சாந்தி தாந்தி பூம்நாம்’ என்று சொல்வது வழக்கம்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x