Published : 27 Feb 2020 08:21 AM
Last Updated : 27 Feb 2020 08:21 AM

அகத்தைத் தேடி 21: சூட்சுமக் கயிறு

தஞ்சாவூர்க்கவிராயர்

சூத்திரப்பாவை கயிறற்று வீழுமுன்

சூட்சம கயிற்றைப் பாரடா அதில்

சூட்சம கயிற்றைப் பாரடா!

நேத்திரம் இரண்டிலும் நேரே இலங்கிய

நீடொளி போன்றது தேடல் மீதாகி

காத்திரம் உள்ளது; யாவும் புரிந்தது

கையிலும் காலிலும் எட்டப்படாதது!

(சூத்திரப்பாவை….)

பாடல்:- குணங்குடி மஸ்தான் சாகிபு

திருவண்ணாமலைக்கு அருகில் தேசூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மஸ்தான். இஸ்லாமிய வழிபாட்டிலும் பழக்கவழக்கங்களிலும் ஊறிய குடும்பத்தில் பிறந்தவர். அல்லா மீதும் நபிகள் மீதும் அளவில்லா பக்தி கொண்டவர். மார்க்க நூல்கள் மட்டுமின்றி தமிழ் பக்தி இலக்கியங்களையும் கைவல்ய நவநீதம், சுகர் வசிஷ்டம் போன்ற வடமொழி நூல்களையும் ஆழ்ந்து பயின்றார். தாயுமானவர் பாடல்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

சூஃபிஞானி குணங்குடி மஸ்தான் சாகிபுவின் எளிய தமிழ் இசுலாமியப் பாடல்களை இசையுடன் பாடுவதில் மஸ்தான் வல்லவர். முஹரம் பண்டிகையின்போது ஆடப்பாடி மகிழ்வார். தாயுமானவர் பாடல்களில் தன்னை மறப்பார்.

தேசூர் கிராமத்தில் ரமணரின் பக்தையான ஒரு அம்மையார் இருந்தார். ரமணாசிரமத்தில் இவரை தேசூர் அம்மாள் என்றே குறிப்பிடுவார்கள். இளைஞர் மஸ்தானின் இறை நாட்டத்தை அறிந்த தேசூர் அம்மாள் அவரை ரமணரிடம் அழைத்து வந்தார். அப்போது ரமணர் விரூபாட்ச குகையில் இருந்தார்.

மஸ்தான் பகவானைப் பார்த்தார். பகவான் ஒரு பாறைபோல் வீற்றிருந்தார். அவர் பார்வை மஸ்தான் மீது படிந்தது. அவ்வளவுதான் படீரென்று திறந்தது மஸ்தானின் இதயவாசல். எட்டுமணி நேரம் சிலையாக நின்றார் மஸ்தான். பகவான் ஒரு பாறை. அங்கிருந்து ஒரு பார்வை. அது மஸ்தானையும் பாறை ஆக்கியது. தன்னை அறியாமலே ரமணரை குருவாக ஏற்றார் மஸ்தான் சாகிபு.

வீடு திரும்பிய பிறகு ஒரு சஞ்சலம் அவருக்கு ஏற்பட்டது.

“நான் எனது முதல் குருவான முகம்மது நபிக்கு விசுவாசமாக இல்லையா? ஒருவேளை எனக்கு முன்னால் நபிகள் நாயகம் இல்லாததுதான் இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணமா?”

மறுநாள் பகவான் முன்பு மெளனமாக நின்றார். அவருக்கு முன்னால் அவர் கேள்வி நின்றது. பகவான் கேட்டார்.

“இந்த உடம்பை பகவான் என்று நினைத்துக்கொண்டுவிட்டாயா? நபிகள் இல்லை என்றால் இல்லை என்று ஆகிவிடுமா? புத்தர் இல்லையா? ஏசு இல்லையா? எத்தனை லடசம்பேரை அவர்கள் இன்றும் வழி நடத்துகிறார்கள்! குருவுக்கும் தூல உடம்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை. உன் இதயமே ஏசு. உன் இதயமே அல்லா. உன் இதயமே புத்தர். உன் இதயமே பகவான். இதயத்தில் மூழ்கி இதயமாய் ஆகி இதயமாய் வீற்றிரு!”

பகவான் உனக்குள் உள்ளார்

ஒரு முறை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த லாகூரில் இருந்து ஒரு அன்பர் வந்தார். ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். புறப்படும்போது கண்கள் கலங்கி உங்களைவிட்டு எப்படிப் போவேன் பகவான் என்று விசும்பினார்.

“பகவானைவிட்டு நீ போகமுடியாது, அப்பனே! பகவான் உனக்குள் உள்ளார். நீயே பகவான்!”

ரமணரின் கருணைவரியில் கட்டுண்டு அந்த பக்தர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்.

எல்லா பக்தர்களின் இதயத்திலும் குருவாய் இருப்பவர் எவரோ அவரே அருணாசல ரமணன். அதற்கு கடவுள், சுகம், இதயம், அல்லா, ஏசு, புத்தர் என்ற எந்தப் பெயர் சூட்டினாலும்.. அது அங்கே இருக்கும்.

மஸ்தான் சுவாமிகள் நெசவுத் தொழிலாளி. பகவானுக்கு கெளபீனமும் துண்டும் தயாரித்து வந்து தருவார். திருமணம் செய்துகொள்ளவில்லை. பகவானின் நிழலிலேயே தங்கிவிட்டார்,

கபீரின் குருபக்தி போன்றது பகவான் மீது அவர் கொண்ட பக்தி. அவரை பகவானின் கபீர் என்று அழைப்பதுண்டு.

சொந்தக் கிராமத்தின் தெருக்களிலேயே அவர் யாசித்தார். பகவானுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றைச் சேகரித்து தேசூர் அம்மாள் மஸ்தானிடம் தருவார். அந்த மூட்டைகளைச் சுமந்துகொண்டு தேசூரிலிருந்து நாற்பது மைல் தூரம் மஸ்தான் நடந்தே வருவார்.

உபதேசம் கிடைத்தது

பகவானின் முன்னிலையில் அவர் உபதேசம் ஏதும் தனக்கு அளிக்கமாட்டாரா என்று ஏங்கி நின்றார்.

“உனக்கு வடிவ உபாசனை வேண்டுமா? வடிவமில்லா உபாசனை வேண்டுமா?” என்று ரமணர் கேட்டார்.

“வடிவமில்லாத உபாசனை வேண்டும்!”

“சிந்தனை எங்கிருந்து எழுகிறது என்று உள்முகமாகப் பார். அங்கே கவனத்தைக் குவி. எண்ணம் அங்கே ஒடுங்கும்! சத்தியம் பிரகாசிக்கும்!. அனுபவத்திலே பார்!”

மஸ்தானின் இதயத்தை துளைத்துச் செல்லும் வழியை மறித்த இருட்டு விலகியது. தேடல் தொடங்கியது. திசை தெளிந்தது.

இதற்குப்பின் எவ்வித உபதேசமும் அவர் பகவானிடம் வேண்டவில்லை. வேண்டியிருக்கவுமில்லை.

கிரிவலத்தில் ஒலித்த பாடல்கள்

மஸ்தான் சுவாமிகள் பலமுறை பகவானுடன் கிரிவலம் செல்வார். அப்போது குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைப் பாடுமாறு பகவான் கூறுவார். மஸ்தான் சுவாமிகள் அந்தப் பாடல்களைப் பாட ரமணர் ஆனந்தமாக கேட்டபடி நடப்பாராம். அல்லாவின் புகழினை உரத்த குரலில் மஸ்தான் பாடியபடி ரமணருடன் நடந்து செல்வார்.

ஆசிரமத்தின் அருகில் பலாக்கொத்து என்ற இடத்தில் பக்தர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிக்குச் சென்று பகவானின் புகழ்பாடி யாசகம் பெற்று வருவார்கள். அவர்களுக்குத் தங்குமிடம் வசதிகள் செய்துதர மஸ்தான் சுவாமிகளை அனுப்பிவைப்பார் ரமணர்.

தாம் ஆசிரமத்தில் இல்லாதபோது பகவானின் உரையாடலில் ஒரு வார்த்தைகூட விடாமல் கேட்டு தனக்குச் சொல்லவேண்டும் என்பதையே இதற்குப் பிரதிபலனாக பக்தர்களிடம் வேண்டுவார் மஸ்தான் சுவாமிகள்.

எப்போதும் தனித்திருப்பார். பணிவு, பக்தி, அர்ப்பணிப்பு-இதன் மொத்த உருவமே மஸ்தான் சுவாமிகள்.

தனது பக்தையான தேசூர் அம்மாவிடம் “மஸ்தான் சுவாமிகள் செல்லுமிடமெல்லாம் கூடவே சென்று அவரை கவனித்துக்கொள்” என்று பணித்தார் ரமணர்.

எந்த ஒரு பக்தருக்கும் அவர் இப்படிச் சொன்னதில்லை.

கோவில் சப்பரத்தில் இறுதிப் பயணம்

மஸ்தான் சுவாமிகள் மறைந்தபோது மழை கொட்டித் தீர்த்தது. உள்ளூர் கோயில் உற்சவ மூர்த்தி செல்லும் சப்பரம், முஸ்லிமான அவர் பூத உடலை எடுத்துச் செல்லக் கொடுக்கப்பட்டது. கண்டோர் கைகுவித்து கண்கலங்க சப்பரம் நகர்ந்தது. தனது அடையாளம் துறந்து இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்தார் மஸ்தான் சுவாமிகள். காடு செல்லவும் அவருக்கு கடவுளின் இருக்கை கிடைத்தது.

(பேதங்கள் மறையட்டும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x